தமிழர்கள் கணிசமாக வாழும் மும்பையில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை அங்குள்ள தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதற்கு முன்னோட்டமாக தமிழ் இளைஞர்கள் மட்டும் பங்குபெற்ற பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியைச் சிறப்பாக நடத்தி அசத்தியுள்ளனர்.
மும்பையில் சிதறிக்கிடக்கும் தமிழர்களை ஒற்றுமைப்படுத்த அங்குள்ள அமைப்புகள் பெரிய அளவில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தத் தொடங்கியுள்ளன. அதை நேரில் காணவும், அங்கு ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவதற்கான சாத்தியம் உள்ளதா என்பதை ஆய்வு செய்யவும் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற பொதுச்செயலாளர் ஜெகதீஷ் சவுந்தர், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை நிர்வாகியும், பட்டிமன்றப் பேச்சாளருமான மதுரை அவனி மாடசாமி தலைமையில் ஒரு குழுவினரும் மும்பை சென்று வந்துள்ளனர்.
அவர்களிடம் பேசியபோது, "மும்பையில் செயல்படும் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றத்தினர் ஐ.பி.எல் போன்று மும்பை தமிழர்களை ஒருங்கிணைத்து முதல் முறையாக எஸ்.பி.எல் எனும் பெயரில் கிரிக்கெட் போட்டியை நடத்தியுள்ளனர்.
முலூண்ட் பகுதியிலுள்ள ராஜே சம்பாஜீ மைதானத்தில் நடந்த இப்போட்டியில் மும்பையில் செயல்படும் முக்கியமான 6 தமிழ் அணிகள் கலந்துகொண்டன.
கிரிக்கெட் போட்டி தொடங்கும்போது தமிழர்கள் மரபுப்படி கிரிக்கெட் ஸ்டம்ப் அருகே தேங்காய் உடைத்து ஊதுபத்தி காண்பித்து ஸ்டம்பிற்கு மாலை அணிவித்து வணங்கினர். அதன் பிறகே டாஸ் போட்டு போட்டியைத் தொடக்கி வைத்தது ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. முதல் பரிசாக கோப்பையுடன் ரூ.51,000-ம் வெள்ளிக் காசும் வழங்கினார்கள்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை, குறிப்பாக தென் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இடம் பெயர்ந்து மும்பை சென்று கடுமையாக உழைத்துப் பல்வேறு தொழில்களைச் செய்து முக்கிய சக்தியாக உருவாகியுள்ளார்கள். பல பகுதிகளில் பல குழுக்களாகப் பிரிந்துகிடந்தாலும் எல்லோரையும் ஒன்றிணைப்பது தமிழர் எனும் அடையாளம்தான்.
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடந்தபோது மும்பையிலும் தொடர்ந்து போராட்டம் நடத்தினார்கள். இதுபோல் உலகில் எந்த மூலையிலும் தமிழருக்கு ஒரு பிரச்னை என்றால் மும்பைத் தமிழர்கள் குரல் கொடுப்பார்கள். இந்த அடிப்படையில்தான் கலை, இலக்கிய விழாக்களைக் கொண்டாடி வருபவர்கள் தற்போது பெரிய அளவில் விளையாட்டுப் போட்டிகளை நடத்தியுள்ளார்கள். அடுத்து ஜல்லிக்கட்டையும் நடத்த விரும்புகிறார்கள். அதற்கான வாய்ப்புகள் விரைவில் உருவாகும்" என்றனர்.
from தேசிய செய்திகள் https://ift.tt/vCQap3P
0 Comments