அடுத்தடுத்து தேர்தல்களில் தோல்வி, தலைவர்கள் போர்க்கொடி போன்றவற்றால் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் சோர்வைச் சந்தித்து வந்தனர். மறுபுறம் பாஜக தேர்தல்களின் வெற்றி பெற்று வந்தது. இதே நிலை நீடித்தால் காங்கிரஸ் மேலும் மோசமான நிலைக்குச் சென்று விடும் என்று அரசியல் நோக்கர்களும், அந்த கட்சியின் மூத்த தலைவர்களும் கருத்து தெரிவித்து வந்தனர். இதை உணர்ந்துகொண்ட காங்கிரஸ் தலைமை கட்சியைப் பலப்படுத்தத் திட்டமிட்டது. இதன் ஒருபகுதியாகத் தேர்தல் நடத்தி அகில இந்திய காங்கிரஸ் தலைவராக கார்கேவை தேர்வு செய்தது.
மேலும் ராகுல் காந்தியின் ஜோடோ யாத்திரையும் தொண்டர்களிடத்தில் புத்துணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த குஜராத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்தாலும் இமாச்சலில் வெற்றி பெற்றிருக்கிறது. இது காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் மட்டும் இல்லாது முக்கிய தலைவர்களுக்கும் புதிய உத்வேகத்தைக் கொடுத்திருக்கிறது. இதனால் விரைவில் நடக்கவிருக்கும் கர்நாடக தேர்தலில் வெற்றி வாகை சூடுவதற்காக பல்வேறு திட்டங்களை கார்கே வகுத்து வருகிறார். குறிப்பாக கல்யாண் கர்நாடக பகுதியின் வளர்ச்சிக்காக 10 அம்ச திட்டங்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் டெல்லியில் கடந்த 12-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் வியூகவாதி சுனில் கனுகோலு, கர்நாடக மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மாநில பிரசார குழு தலைவர் எம்.பி.பட்டீல் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
இதில் பேசிய சுனில், "ஊழல் குற்றச்சாட்டுகளால் கர்நாடக மாநில மக்கள் பொம்மை அரசின் மீது அதிருப்தி அடைந்துள்ளனர். இருப்பினும் இதை பயன்படுத்தி காங்கிரஸ் வெற்றிக்கான வாய்ப்பை உயர்த்த தவறிவிட்டது. பாரத் ஜோடோ யாத்திரை கர்நாடகா வழியாகச் சென்றதால், கட்சியின் நடவடிக்கைகளில் வேகம் ஏற்பட்டது. இருப்பினும், அது விரைவில் தணிந்தது. ஆளும் ஆட்சியின் தவறான செயல்களை அம்பலப்படுத்தி வெற்றிக்கான களத்தை அமைக்க வேண்டும்.
மேலும் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் மாவட்டம் தோறும் 'ஜன் சங்கல்ப யாத்திரை' நடத்தப்பட்டு வருகிறது. ஜனதா தளம் (எஸ்) கட்சி 'பஞ்சரத்னா யாத்திரை' மூலமாகப் பிரசாரம் செய்து வருகிறது. அத்தகைய பிரசாரத்தைக் காங்கிரஸ் இன்னும் தொடங்கவில்லை. பாரத் ஜோடோ யாத்திரைக்குப் பிறகு மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் பெரிய நிகழ்வுகள் நடத்தப்படவில்லை" என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர் ஜனவரி நடுப்பகுதிக்குள் குறைந்தபட்சம் 150 வேட்பாளர்களை இறுதி செய்ய வேண்டும் என்று தேசிய தலைவர்களை மாநில தலைவர்கள் வலியுறுத்தினர். இதற்குப் பதிலளித்த, கார்கே... `சரியான வேட்பாளர்களைத் தேர்வு செய்ய விரைவில் தேர்தல் குழு அமைக்கப்படும்’ என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த கூட்டத்திற்குப் பிறகு ரன்தீப்சிங் சுர்ஜேவாலா அளித்த பேட்டியில், "கர்நாடகத்தில் சட்டசபைத் தேர்தலுக்குத் தயாராவது குறித்து நாங்கள் ஆலோசனை நடத்தினோம். அடுத்த 75 நாள்களுக்குள் கட்சியைப் பலப்படுத்தும் வகையில் பல்வேறு முடிவுகளை எடுத்திருக்கிறோம். இதில் ஜனவரி முதல் வாரத்தில் கூட்டு யாத்திரை தொடங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த கூட்டு யாத்திரை 45 முதல் 50 நாள்கள் வரை நடைபெறும்.
மேலும் 224 தொகுதிகளில் இந்த யாத்திரை நடைபெற உள்ளது. இந்த யாத்திரையின்போது, கர்நாடகத்தில் பாஜக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள், 40 சதவீத கமிஷன் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து மக்களுக்குத் தெரிவிக்க இருக்கிறோம். வரும் 30-ம் தேதி விஜயாப்புரா, ஜனவரி மாதம் 2-ம் தேதி உப்பள்ளி, 8-ம் தேதி சித்ரதுர்காவில் பிரமாண்டமான முறையில் கட்சியின் மாநாடுகளை நடத்த முடிவு செய்திருக்கிறோம்" என்றார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/E2MzLh4
0 Comments