தேனி மாவட்டம், ஆண்டிபட்டியைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 10 பேர் காரில் சபரிமலைக்குச் சென்று தரிசனம் முடித்து நேற்று இரவு ஊர் திரும்பினர். குமுளி மலைச் சாலையில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஆண்டிபட்டியைச் சேர்ந்த முனியாண்டி (55), தேவதாஸ் (54), கன்னிச்சாமி (55), நாகராஜ் (46), வினோத் (47), சிவக்குமார் (45), கலைச்செல்வன் (45), கோபாலகிருஸ்ணன் (42) ஆகிய 8 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்திருந்த நிலையில்... சடலமாக மீட்கப்பட்டனர். ஆண்டிபட்டியைச் சேர்ந்த ராஜா (40) மற்றும் அவரின் மகன் ஹரிஹரன் (7) படுகாயங்களுடன் மீட்கப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
8 பேரை பலிகொண்ட இந்த கோர விபத்து, ஆண்டிபட்டி மக்களைப் பெரும் சோகத்தில் மூழ்கடித்தது. ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பிணவறை பகுதியில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் விபத்தில் படுகாயமடைந்த தந்தை, மகனையும் அவர்களது உறவினர்களையும் சந்தித்து ஆறுதல் கூறி ஒன்றரை லட்சம் ரூபாயை வழங்கிச் சென்றார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, ``உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. விரைவில் முதலமைச்சர் நிவாரணத்தை அறிவிப்பார். குமுளி மலைச் சாலை விபத்து ஏற்படக்கூடிய ஆபத்தான வழித்தடம் இல்லை. இந்த விபத்து மிக மிக எதிர்பாராதது. கார் டிரைவர் 2 நாள்களாக திருப்பதி சென்று வந்தவர்... ஓய்வின்றி மீண்டும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்றுள்ளார். அதனால் திரும்பும் வழியில் ஏற்பட்ட தூக்க அசதியில் இந்த விபத்து ஏற்பட்டிருக்கக் கூடும் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது" என்றார்.
இதற்கிடையே சிகிச்சையில் இருக்கும் ராஜாவின் தந்தை நடராஜனிடம் பேசினோம். ``என்னுடைய மகன் ராஜா 12 ஆண்டுகளாக மாலை அணிந்து விரதம் இருந்து கோயிலுக்குச் சென்று வருகிறான். இந்த முறை என்னுடைய மகனுடன் முதன்முறையாக பேரன் ஹரிஹரன் மாலை அணிந்து விரதம் இருந்து கோயிலுக்குச் சென்றான். வியாழக்கிழமை மாலை வீட்டிலிருந்து சாமி கும்பிட்டுவிட்டு சபரிமலைக்கு கிளம்பினார்கள். மறுநாள் இரவு வீட்டுக்கு வந்துவிடுவதாகக் கூறினர். அதேபோல என்னுடைய மருமகளிடம் என் மகன் இரவு 11:30 மணிக்கு வீட்டிற்கு வந்துவிடுவோம் எனக் கூறியுள்ளார்.
நானும் என்னுடைய மகனும் டீ கேன்களை கட்டிக்கொண்டு ஆண்டிப்பட்டி முழுவதும் உள்ள மில்களுக்குச் சென்று அங்குள்ள தொழிலாளர்களுக்கு டீ விற்பனை செய்து பிழைத்து வருகிறோம். என் மருமகள் சித்ரா டீ, சுண்டல், பயறு வகைகளை தயார் செய்து கொடுத்தால்... என் மகன் காலையும், மாலையும் ஊரையே சுற்றி டீ விற்று உழைத்தான். இனிமே என் பேரப்பிள்ளைகளை எப்படி ஆளாக்கப் போறேனு தெரியவில்லை.
என் மகனும் பேரனும் முன் சீட்டில் அமர்ந்துள்ளனர். மற்றவர்கள் காரின் பின்பக்கம் அமர்ந்திருக்கின்றனர். டிரைவர் தூக்கமில்லாமல் வண்டி ஓட்டியதால் கவனக்குறைவு ஏற்பட்டு சாலையோத்தில் உள்ள மரத்தில் காரை மோதி பிறகு கட்டுப்படுத்த முடியாமல் முல்லைப்பெரியாறு தண்ணீர் வரும் குழாய் மீது விழுந்துள்ளது. கார் கவிழப்போகிறது என்பதை அறிந்தவுடன் என் மகன் பேரனை வெளியே தூக்கிப் போட்டுள்ளான். அவன் ரோட்டுக்கு வந்து அழுது கூச்சலிட்டுள்ளான்.
அப்போது அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் விசாரித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பிறகே பள்ளத்தில் குழாய்களுக்கு இடையே சிக்கியிருந்தவர்களும் காரும் மீட்கப்பட்டுள்ளது. என் பேரன் வெளியே வரவில்லை என்றால் அவன் உயிரும் போயிருக்கும், விபத்து நடத்ததும் யாருக்கும் தெரியாமல் இருந்திருந்திருக்கும். தற்போது என் பேரனுக்கு உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது. மகனின் நிலை மோசமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்" என்றார்.
இதேபோல பிணவறை பகுதியில் ஆண்டிபட்டி பகுதியைச் சேர்ந்த மக்களும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் உறவினர்களும் கூடியிருந்தனர். உயிரிழந்த 8 பேரின் குடும்பத்திலும் 10 வயது முதல் 20 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உள்ளனர். அவர்கள் கதறி அழுதது, அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
from தேசிய செய்திகள் https://ift.tt/edQEIaH
0 Comments