மகாராஷ்டிராவின் எல்லையில் கர்நாடகா எல்லைக்குள் இருக்கும் பெல்காம் உட்பட 5 நகரங்கள் மற்றும் மராத்தி பேசும் 865 கிராமங்களை மகாராஷ்டிராவுடன் இணைக்கவேண்டும் என்று மகாராஷ்டிரா அரசு நீண்ட நாள்களாக கோரி வருகிறது. இந்த எல்லைப் பிரச்னை தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது. சமீபத்தில் இந்தப் பிரச்னை மீண்டும் விஸ்வரூபம் எடுத்ததால் மகாராஷ்டிரா அரசு கேட்கும் இடங்களை அந்த மாநிலத்துடன் இணைக்க முடியாது என்றும், ஏற்கெனவே இருக்கும் எல்லையில் எந்தவித சமரசமும் செய்து கொள்ள முடியாது என்றும் கூறி கர்நாடகா அரசு பெல்காமில் கூடிய சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது.
உடனே கர்நாடகா இயற்றிய தீர்மானத்தைவிட வலுவான தீர்மானத்தை நாங்களும் நிறைவேற்றுவோம் என்று மகாராஷ்டிரா அரசு தெரிவித்திருந்தது. அதன்படி, இன்று மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் இது தொடர்பான தீர்மானத்தை சட்டமன்றத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தாக்கல் செய்தார். அந்த தீர்மானத்தில், பெல்காம் எனப்படும் பெலகாவி, கார்வார், பிடார், நிப்பானி, பால்கி நகரங்கள் மற்றும் எல்லையோரத்தில் இருக்கும் மராத்தி பேசும் 865 கிராமங்களை மகாராஷ்டிராவுடன் இணைக்கப்படும்.
அதற்கு சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்து சட்டப்போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச்செல்வது என்றும், எல்லையோர மராத்தி பேசும் மக்களுக்கு தேவையான உதவிகள் செய்வது என்பதில் மகாராஷ்டிரா அரசு உறுதியாக இருக்கிறது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதோடு எல்லைப் பிரச்னை தொடர்பாக கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா முதல்வர்கள் இடையே மத்திய அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகளை அமல்படுத்தவேண்டும் என்றும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு மராத்திக்கு எதிராக கர்நாடகாவின் நிலைப்பாட்டிற்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானம் குறித்து கருத்து தெரிவித்த கர்நாடகா காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா, ``இது உணர்ச்சியை தூண்டிவிடும் செயல்" என்று தெரிவித்தார். கர்நாடகா அரசும் இது தொடர்பாக வெளியிட்ட செய்தியில், ``இந்தப் பிரச்னையை மகாராஷ்டிரா அரசுதான் உருவாக்கியது" என்று குறிப்பிட்டிருந்தது.
from தேசிய செய்திகள் https://ift.tt/72wsMqA
0 Comments