கேரள மாநிலம், காசர்கோட்டைச் சேர்ந்த மரியம் ஷகலா என்ற 19 வயது இளம்பெண் துபாயில் உள்ள தனது குடும்பத்தினரை பார்ப்பதற்காக விசிட்டர்ஸ் விசாவில் சென்றுவிட்டு நேற்று விமானம் மூலம் திரும்பி வந்திருகிறார். கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையம் வந்த அவர் சுங்கத்துறை உள்ளிட்ட அனைத்து சோதனைகளையும் கடந்து விமான நிலையத்தைவிட்டு வெளியே வந்துவிட்டார். இதர்கிடையே அவர் தங்கம் கடத்திக்கொண்டு வந்திருப்பதாக போலீஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், விமான நிலையத்துக்கு வெளியே அவரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். போலீஸார் அவரை தனியாக அழைத்துச் சென்று லக்கேஜ்களை பரிசோதித்தனர்.
சோதனையில் எதுவும் சிக்கவில்லை. தனக்கும் தங்கம் கடத்தல்காரர்களுக்கும் எந்தவித தொடர்பு இல்லை என மரியம் ஷகலா தெரிவித்திருக்கிறார். தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவல் உண்மை என்பதை உறுதிபடுத்திய போலீஸார், பெண் போலீஸார் மூலம் மரியம் ஷகலாவை தனி அறைக்கு அழைத்துச் சென்று ஆடைகளை பரிசோதித்தனர்.
அதில் உள்ளாடையுடன் தைக்கப்பட்ட நிலையில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. மொத்தம் 1,884 கிராம் எடை உள்ள 24 காரட் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மதிப்பு ஒரு கோடி ரூபாய் எனத் தெரியவந்துள்ளது. வெளிநாட்டிலிருந்து தங்கம் கடத்தப்பட்ட வழக்கு என்பதால் அது சுங்கத்துறைக்கு மாற்றப்பட்டது. சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில், துபாயில் உள்ள குடும்பத்தினரை சந்திக்க விசிட்டர்ஸ் விசாவில் சென்றுவந்ததாகவும். தனது நண்பர் ஒருவர் தங்கத்தை கொடுத்து அனுப்பியதாகவும்... முதன்முதளாக தங்கம் கடத்தலில் ஈடுபட்டதாகவும் மரியம் ஷகலா தெரிவித்திருக்கிறார்.
தங்கம் கடத்தலில் உள்ளவர்களே ரகசியமாக போலீஸாருக்கு தகவல் அளித்ததால் இந்தக் கடத்தலை கண்டறிய முடிந்திருக்கிறது. உலோகத்தின் அடர்த்தியை குறைக்கும் திரவத்தில் கலந்து தங்கத்தை கொண்டுவந்ததால் சுங்கத்துறையின் மெட்டல் டிடக்ட்டரில் மரியம் ஷகலா சிக்காமல் தப்பித்திருக்கிறார். விமானம் மூலம் தங்கம் கடத்தலில் சிக்கிய மிகவும் வயது குறைந்த பெண் இவர் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமான நிலையத்தில் சோதனை கடுமையாக்கப்பட்டுள்ளதால் தங்கம் கடத்தல் கும்பல் கடத்தலுக்குப் பெண்களைப் பயன்படுத்துவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
from தேசிய செய்திகள் https://ift.tt/fKS2FCD
0 Comments