பெண் உட்பட 4 குழந்தைகள் கொலை; 28 ஆண்டுகள் தலைமறைவு - இளைஞரை சிக்க வைத்த பாஸ்போர்ட்?!

மும்பை புறநகர் பகுதியில் உள்ள மீராரோட்டில் வசித்தவர் ஜக்ரானி தேவி பிரஜாபதி(27). இவருக்கு 3 மாத குழந்தை உட்பட 4 குழந்தைகள் இருந்தன. கடந்த 1994-ம் ஆண்டு நவம்பர் 16-ம் தேதி ஜக்ரானியின் மகள் பிங்கி(3) பக்கத்து வீட்டில் வசிக்கும் அணில் என்பவரின் சூட்கேஸ் கைபிடியை உடைத்துவிட்டார். இதனால் ஜக்ரானிக்கும், அணிலுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது.

இதில் ஜக்ரானியை அணில் மானபங்கம் செய்ய முயன்றார். அந்த நேரத்தில் ஜக்ரானியின் கணவர் வேலைக்கு சென்று இருந்தார். இச்சண்டையால் கோபம் அடைந்த அணில் தன்னுடன் அருகில் வசிக்கும் ராஜ்குமார் அமர்நாத் சவுகான் மற்றும் சுனில் சரோஜ் ஆகியோருடன் ஜக்ரானியின் வீட்டுக்கு சென்று அவரை கத்தியால் குத்திக்கொலை செய்தார். அதோடு வீட்டில் இருந்த 3 மாதக்குழந்தை உட்பட 4 குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். மாலையில் ஜக்ரானியின் கணவர் வீட்டுக்கு வந்த போது கதவு பூட்டப்பட்டு இருந்தது.

மரணம்

உடனே இவரின் கணவர் வீட்டின் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்த போது மனைவி மற்றும் குழந்தைகள் இறந்து கிடந்தது தெரிய வந்தது. உடனே இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். ஜக்ரானிக்கும், அணிலுக்கும் இடையே காலையில் சண்டை நடந்ததை மற்றொரு பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் பார்த்திருந்தார். அதோடு பக்கத்து வீட்டில் வசித்த அனில் உட்பட 3 பேரும் தலைமறைவாக இருந்தனர்.

அவர்களை போலீஸார் தேடி வந்தனர். விசாரணையில் அணில் மற்றும் சுனில் ஆகியோர் உறவினர்கள் என்றும், உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூரைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்தது. சவுகானுக்கு சொந்த ஊர் பனாரஸ் என்று தெரிய வந்தது. இவ்வழக்கு நீண்ட நாள்களாக நிலுவையில் இருந்து வந்தது. கடந்த 2020-ம் ஆண்டு மகேஷ் பாட்டீல் துணை போலீஸ் கமிஷனராக பதவியேற்ற போது கண்டுபிடிக்கப்படாமல் இருக்கும் வழக்குகளை தூசி தட்டி எடுத்தார். இதில் ஜக்ரானியின் வழக்கும் அடங்கும். விசாரணையில் இந்த வழக்கில், தொடர்புடைய குற்றவாளிகளின் கிராமம் குறித்த தகவல் கிடைத்தது. உடனே தனிப்படை போலீஸார் அக்கிராமத்திற்கு சென்றனர்.

போலீஸ்

இதில் பனாரஸ் சென்று விசாரித்த போது சவுகான் கத்தாரில் வேலை செய்வது தெரிய வந்தது. உடனே அவரின் பாஸ்போர்ட் நம்பரை வாங்கி இமிக்ரேசன் அதிகாரிகளிடம் போலீஸார் பதிவு செய்து வைத்திருந்தனர். மற்ற இருவரின் கிராமத்துக்குச் சென்ற போது அவர்கள் சொந்த கிராமத்துக்கு வருவதில்லை என்று தெரிய வந்தது. இந்த நிலையில், கத்தாரில் வேலைக்கு சென்று இருந்த சவுகான் மும்பை வந்தார். அவரின் பாஸ்போர்ட்டை சோதித்த அதிகாரிகள் ஏற்கெனவே அவர் தேடப்படுவோர் பட்டியலில் இருப்பது தெரிய வந்தது. உடனே அவரை கைது செய்த அதிகாரிகள் அவரை போலீஸில் ஒப்படைத்தனர். அவர் 28 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



from தேசிய செய்திகள் https://ift.tt/xN2JmOe

Post a Comment

0 Comments