இஸ்லாமிய பெண்களுக்குத் தனியாக 10 கல்லூரிகள்? - கர்நாடக அரசுக்கெதிராக இந்து அமைப்புகள் போர்க்கொடி

கர்நாடகாவில் கல்லூரி ஒன்றில், மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, மாநிலம் முழுதும் பெரும் போராட்டங்கள் வெடித்தன. உலக நாடுகள் பலவும், மாணவிகளுக்கு ஆதரவாகக் கருத்துகளைக் கூறிய நிலையில், நாடு முழுவதும் சர்ச்சைகள் எழுந்தன.

இந்த நிலையில், நேற்று காலை கர்நாடகாவில் அரசு சார்பில், இஸ்லாமிய மாணவிகளுக்காக தனியாக, பத்து கல்லுாரிகள் விரைவில் கட்டப்பட இருக்கிறது என்ற, செய்திகள் பரவியதை தொடர்ந்து, இந்து அமைப்புகள் அரசுக்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்து வருவதால், கர்நாடக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்பட்டிருக்கிறது. விஷயம் பூதாகரமானதை தொடர்ந்து, முதல்வர் பசவராஜ் பொம்மை இந்த தகவலை முற்றிலுமாக மறுத்திருக்கிறார்.

ஹிந்து ஜன ஜக்ருதி சமிதி தலைவர் மோகன் கெளடா

மாநிலம் தழுவிய போராட்டம் நடத்துவோம்!

இது குறித்து, ஹிந்து ஜன ஜக்ருதி சமிதி தலைவர் மோகன் கெளடா செய்தியாளர்களிடம், ‘‘கர்நாடகாவில், இஸ்லாமிய பெண்களுக்கு பிரத்யேக கல்லுாரி துவங்கினால், நிச்சயமாக இந்துக்களுக்காக தனியாக கல்லுாரி மற்றும் கல்வி நிலையங்கள் கட்டப்படும். கர்நாடக அரசு இந்த கல்லுாரிகளை கட்டுமானால், அது ஜனநாயகத்துக்கும், அரசியலமைப்புக்கும் எதிரானது. கல்லுாரிகள் கட்டப்பட்டால், மாநிலம் முழுதும் இந்து அமைப்புகளை திரட்டி போராட்டம் நடத்துவோம்,’’ என எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய, ஸ்ரீ ராம சேனா நிறுவனர் பிரமோத் முத்தாலிக், ‘‘முடிந்தால் கர்நாடக அரசு கல்லுாரிகளை திறக்கட்டும் பார்க்கலாம். கர்நாடகாவில், இஸ்லாமிய பெண்களுக்கு தனியாக கல்லுாரி தொடங்குவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அப்படி நடந்தால், மாநிலம் தழுவிய தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்'' என பா.ஜ.க அரசுக்கு சவால் விடும் வகையில் கருத்து தெரிவித்திருக்கிறார்.

அரசுக்கு அப்படியொரு திட்டமே இல்லை!

முதல்வர் பசவராஜ் பொம்மை இது குறித்து செய்தியாளர்களிடம், ‘‘இஸ்லாமிய பெண்களுக்கு தனியாக கல்லுாரி துவங்க வேண்டுமென, அரசு சார்பில் எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. இது, கர்நாடக மாநில வஹ்பு வாரிய தலைவர் மவுலானா ஷப்டி சாதியின் தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம்.

பசவராஜ் பொம்மை.

கர்நாடக அரசுக்கு அப்படி எந்தவொரு முடிவும் இல்லை; இது குறித்து அரசு சார்பில் எந்தத்துறையிலும் ஆலோசனை நடத்தப்படவில்லை. கல்லுாரிகள் கட்ட வேண்டுமென திட்டம் இருந்தால், வஹ்பு வாரிய தலைவர் அரசிடம் வந்து பேசட்டும்,’’ என தெரிவித்திருக்கிறார்.

வஹ்பு வாரிய தலைவர் மவுலானா ஷப்டி சாதி

‘கல்வியை வைத்து அரசியல் செய்யாதீங்க’!

இது குறித்து, கர்நாடக மாநில வக்ஃபு வாரிய தலைவர் மவுலானா ஷப்டி சாதி செய்தியாளர்களிடம், ``பெண்களுக்காக மாநிலத்தின், பத்து மாவட்டங்களில் தலா, 2 – 2.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பத்து கல்லுாரிகள் கட்ட  திட்டமிட்டிருக்கிறோம். ஆனால், இது தொடர்பாக இதுவரை அரசுக்கு நாங்கள் எந்த வேண்டுகோளும் விடுக்கவில்லை, ஆலோசனையும் நடத்தவில்லை.

நான் பேசியது முழுமையாக செய்திகளில் வெளியிடப்படவில்லை, குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. வக்ஃபு வாரியம் சார்பில், 112க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

வக்ஃபு வாரியம் சார்பில், இக்கல்லுாரிகளை பெண்களின் கல்வி முன்னேற்றத்துக்காக மட்டுமே கட்டப்போகிறோம். கல்லுாரிகள் கட்ட அரசு அனுமதி கொடுத்தால் மட்டுமே, வக்ஃபு வாரியத்தில் இருந்து நிதி ஒதுக்குவோம். முஸ்லிம் பெண்கள் மட்டும் படிக்க வேண்டுமென்பதற்காக இந்த முயற்சிகள் வக்ஃபு வாரியத்தால் எடுக்கப்படவில்லை. அனைத்து சமூகத்தினரும் இங்கு கல்வி கற்கலாம். கல்வி அனைவருக்கும் பொதுவானது, சமமானது. பெண்களின் கல்வியில் அரசியல் செய்யக்கூடாது. அரசு எங்கள் கோரிக்கையை ஏற்று அனுமதி வழங்குமென நம்புகிறோம்'' எனத் தெரிவித்தார்.

ஹிஜாப்

கடந்த ஒரு வாரமாக இந்து அமைப்புகள், ‘கர்நாடக மாநிலத்திலுள்ள கோயில்களுக்கு அருகே இஸ்லாமியர்கள் கடைகள் நடத்தக்கூடாது,’ எனக்கூறி போராட்டம் நடத்துவதாக அறிவித்திருப்பதால் பரபரப்பு குறையாமல் இருக்கிறது. இப்படியான சூழலில் கல்லுாரி விவகாரம் பெரும் பூதாகரமாகி இருப்பதுடன் இந்து தலைவர்கள் Vs பா.ஜ.க அரசு என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.



from தேசிய செய்திகள் https://ift.tt/vHilXBO

Post a Comment

0 Comments