மங்களூர் குண்டு வெடிப்பு: பலருக்குப் பயிற்சி கொடுத்தாரா ஷாரிக்? - மூன்று மாநிலங்களில் விசாரணை!

கர்நாடக மாநிலம், மங்களூரில் ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்த சம்பவம் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குக்கர் குண்டு தயாரித்து எடுத்துச்சென்ற முகமது ஷாரிக் (24) படுகாயங்களுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய வீட்டில் சோதனை செய்து, பேட்டரிகள், சல்பர், பாஸ்பரஸ், ‘சர்கியூட்’, ஆணி, ‘போல்டு நட்’ உட்பட வெடிகுண்டி (டைம் பாம் அல்லது ரிமோட் பாம்) தயாரிக்க பயன்படுத்தும் பலவகை பொருள்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

முகமது ஷாரிக்

அனல் பறக்கும் விசாரணையில், ஷாரிக்குக்கு உதவிய, தொடர்பில் இருந்ததாக ஊட்டியில் ஒருவர், கர்நாடக மாநிலம், மைசூரில் இருவர், மங்களூரில் ஒருவர் என, நான்கு பேரை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

வழக்கை என்.ஐ.ஏ வசம் ஒப்படைத்துவிட்டு, அவர்களுடன் இணைந்து விசாரணை நடத்தி வரும் கர்நாடக போலீஸார், ஷாரிக் உடன் தொடர்பில் இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் நேற்றுவரை, 43-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியிருக்கின்றனர். குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக அனுதினமும், பகீர் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

வெடிகுண்டுக்கான மூலப்பொருள்கள்

40 பேருக்கு பயிற்சி கொடுத்த முகமது ஷாரிக்?

இந்தச் சம்பவம் தொடர்பாக கர்நாடக போலீஸார், என்.ஐ.ஏ தரப்பிலிருந்து பெரிய அளவில் தகவல்கள் இன்னமும் வெளியிடப்படாத நிலையில், கர்நாடக பா.ஜ.க தலைவர்கள் தினமும் புதுப்புது தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மத்திய இணை அமைச்சர் ஷோபா கரண்ட்லஜே செய்தியாளர்களிடம், ``முகமது ஷாரிக் 2020-ல், பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக, மங்களூரு பகுதிகளிலுள்ள சுவர்களில் எழுதியதற்காக, கைதுசெய்யப்பட்டார். அதன் பின்னர் ஜாமீனில் வெளிவந்ததும் தலைமறைவாகியிருக்கிறார். ஷாரிக் பயங்கரவாத அமைப்புகளால் கவரப்பட்டு பின், ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்து அவர்களிடம் வெடிகுண்டு தயாரிப்பு உட்பட பலவற்றை கற்றுக்கொண்டிருக்கிறார்.

இணை அமைச்சர் ஷோபா கரண்ட்லஜே.

ஷாரிக் கற்றுக்கொண்டதை, 40 பேருக்கு பயிற்சியும் கொடுத்திருக்கிறார் என்ற ஆபத்தான தகவலும் தற்போது தெரியவந்திருக்கிறது. அவர், மங்களூரில் பிரசித்தி பெற்ற, கத்ரி மஞ்சுநாதா சுவாமி கோயிலில் குக்கர் குண்டை வெடிக்கச் செய்ய ‘டார்கெட்’ செய்திருக்கிறார். குண்டை வெடிக்கச் செய்து தன்னை இந்து போல காண்பித்து, கடலோர கர்நாடக பகுதிகளில் மத கலவரத்தை ஏற்படுத்தவும், பா.ஜ.க தலைவர்களுக்கு பிரச்னையை ஏற்படுத்தவும் திட்டமிட்டிருந்தார்.

ஐ.எஸ்.ஐ.எஸ், பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா ஆகிய இரண்டு பயங்கரவாத அமைப்புகளும், கடலோர கர்நாடகா, கேரள பகுதிகளில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. என்.ஐ.ஏ இது குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும். கர்நாடக மாநில போலீஸார் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்'' என்றார்.

‘மூன்று மாநிலங்களில் விசாரணை’

கர்நாடக போலீஸாரிடம் இது குறித்து விசாரித்தோம், ‘‘முகமது ஷாரிக் ஜாமீனில் வெளிவந்ததும், மங்களூர் பகுதியில் ஒரு துணிக்கடையில் வேலை செய்து கொண்டிந்தபோது, 2021-ல் அங்கிருந்து யாருக்கும் தெரிவிக்காமல் சென்றுவிட்டார்.

2021 முதல் குக்கர் குண்டு வெடித்தது வரையில், போலி ஆதார் அட்டை மற்றும் போலி அடையாளங்களைப் பயன்படுத்தி அடிக்கடி வீட்டை மாற்றி வந்திருக்கிறார்; தமிழகம், கர்நாடகம், கேரளா என கடலோர மற்றும் மாநில எல்லையோர பகுதிகளில் தங்கி, பயணித்திருக்கிறார். மூன்று மாநிலங்களிலும் இரண்டு ஆண்டுகளில் யாரையெல்லாம் சந்தித்தார், எங்கெங்கு பயணித்தார் என தீவிரமாக விசாரித்து வருகிறோம். முகமது ஷாரிக் குழுவாக இயங்குவதற்காக புதிய நபர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி, அவர்களுக்கும் பயிற்சி கொடுத்திருக்க அதிக வாய்ப்பிருக்கிறது.

சித்தராமையா

முகமது ஷாரிக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், அவரிடம் விசாரணை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. சிகிச்சை முடிந்ததும் அவரிடம் விசாரணை நடத்தப்படும். யாருக்கெல்லாம் பயிற்சி கொடுத்தார், தொடர்பில் இருந்தார் எனத் தெரியவரும்’’ என்றனர்.

கர்நாடக காங்கிரஸ் முன்னாள் முதல்வர் சித்தராமையா, குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து, ‘‘குக்கர் குண்டு வெடித்த சம்பவம் ஒரு ‘இன்டலிஜென்ஸ் ஃபெய்லியர்’. உளவுத்துறையும், உள்துறை அமைச்சரும் இந்த தோல்விக்கு பொறுப்பேற்க வேண்டும்’’ எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/KA7nr1s

Post a Comment

0 Comments