மும்பையின் புறநகர்ப் பகுதியான கோரேகாவ் ஆரே காலனி பகுதியில் அடர்ந்த காட்டுப்பகுதி இருக்கிறது. இதில் பொதுமக்களும் வீடு கட்டி வசிக்கின்றனர். இந்தக் காட்டுப்பகுதியில் அதிக அளவில் சிறுத்தைகள் இருக்கின்றன. சிறுத்தைகள் அடிக்கடி மக்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்து தாக்குவதுண்டு. மும்பை அருகிலுள்ள கல்யாண் என்ற இடத்தில் இன்று அதிகாலையில் அனுராக் என்ற குடியிருப்புக் கட்டடம் ஒன்றுக்குள் சிறுத்தை நுழைந்துவிட்டது. காலையில் சிறுத்தையைப் பார்த்த குடியிருப்புவாசிகள் அதிர்ச்சியடைந்து பயந்து ஆங்காங்கே தப்பித்து ஓடினர். பக்கத்திலுள்ள கட்டிடங்களில் வசிப்பவர்களுக்கு சிறுத்தை வந்திருப்பது குறித்து தெரியவந்தது. இதனால் சிறுத்தை நுழைந்த கட்டடத்தைச் சுற்றி நூற்றுக்கணக்கானோர் கூடினர்.
வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வனத்துறையினர் உடனே விரைந்து வந்து சிறுத்தைக்கு மயக்க ஊசி போட்டு பிடித்தனர். சிறுத்தை தாக்கியதில் பொதுமக்கள் 3 பேர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். கூண்டு வரவழைக்கப்பட்டு சிறுத்தை போரிவலி சஞ்சய் காந்தி தேசிய பூங்காவுக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை அருகிலுள்ள ஹாஜி மலாங் மலைப்பகுதியிலிருந்து வந்திருக்கலாம் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஹாஜி மலாங் மலைப்பகுதியில் அடர்ந்த காடு இருக்கிறது.
இதே போன்று இரண்டு நாள்களுக்கு முன்பு மும்பை ஐ.ஐ.டி வளாகத்துக்குள் சிறுத்தை ஒன்று புகுந்துவிட்டது. ஐ.ஐ.டி வளாகம் சஞ்சய் காந்தி தேசியப் பூங்காவோடு எல்லையை பகிர்ந்துகொண்டுள்ளது. இதனால் அங்கிருந்து சிறுத்தை வந்திருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். ஆனால் அந்த சிறுத்தை இன்னும் பிடிபடவில்லை. சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர தேடுதல் பணியை முடுக்கிவிட்டுள்ளனர். இதன் காரணமாக மாணவர்கள் தொடர்ந்து அச்சத்திலிருந்து வருகின்றனர்.
from தேசிய செய்திகள் https://ift.tt/KIZcPOC
0 Comments