மும்பை மெட்ரோபாலிடன் பகுதியில் தமிழர்கள் ஒருசிலர் மட்டுமே கவுன்சிலராக இருக்கின்றனர். மும்பை அருகிலுள்ள பிவாண்டி மாநகராட்சியில் கவுன்சிலராக இருப்பவர் நித்யானந்த் நாடார். இவர் டோம்பிவலியில் வசிக்கிறார். `வாசு அண்ணா’ என்று அனைவராலும் அழைக்கப்படும் நித்யானந்த், இரண்டாவது முறையாக கவுன்சிலராக இருக்கிறார். முதன்முறை சிவசேனா கவுன்சிலராக இருந்தார். தற்போது பா.ஜ.க கவுன்சிலராக இருக்கிறார். இவர் பிவாண்டியிலுள்ள லஹோதி காம்பவுண்டில் இருந்தபோது அங்கு வந்த 15 பேர்கொண்ட கும்பல் நித்யானந்தை இரும்புக்கம்பி, கட்டைகளால் தாக்கினர். இதில் அவர் படுகாயமடைந்தார். தற்போது மருத்துவச் சிகிச்சையில் இருக்கிறார்.
இந்தச் சம்பவமம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கேதன் செய்தியாளர்களிடம், ``வாசு, தன் பாதுகாவலருடன் இரவு 9 மணிக்கு காரில் புறப்பட்டார். லஹோதி காம்பவுண்டு அருகே வந்தபோது எதிர்த் திசையிலிருந்து வந்த காரில் இருந்த நபர், வாசுவின் காரை நோக்கிக் கைகாட்டினார்.
உடனே காரில் இருப்பவர் தன்னுடைய கட்சிக்காரராக இருக்க வேண்டும் என்று கருதிய வாசு, டிரைவரிடம் காரை நிறுத்தும்படி கூறினார். காரை நிறுத்தியவுடன் மற்றொரு காரில் இருந்தவர்கள் கல் மற்றும் கம்பால் வாசுவைச் சரமாரியாகத் தாக்கினர். இதில் அவர் படுகாயமடைந்தார். வாசுவிடம் வாக்குமூலம் பெறப்பட்டிருக்கிறது. இந்தத் தாக்குதல் சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருக்கிறது. அதனடிப்படையில் குற்றவாளிகளைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது’’ என்று தெரிவித்தார்.
வாசுவின் மெர்சிடிஸ் காரையும் அந்தக் கும்பல் அடித்துச் சேதப்படுத்தியது. காயமடைந்த வாசு, பிவாண்டி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். அவருக்கு தலை, வாய்ப் பகுதிகளில் காயம் ஏற்பட்டிருக்கிறது.
இது குறித்து போலீஸ் டி.சி.பி நவ்நாத், ``இந்தத் தாக்குதல் குறித்து சதீஷ் என்பவர் மட்டும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். மற்றவர்களைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது’’ என்று தெரிவித்தார்.
இது குறித்து வாசு, ``கட்சியிலுள்ள வேறு கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கின்றனர். கட்சியில் கோஷ்டி மோதல் இருப்பதாகத் தலைமைக்குப் புகார் கொடுத்தேன். அதனால் அதிருப்தியில் சிலர் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று கருதுகிறேன்’’ என்று தெரிவித்தார். வாசுவைத் தாக்கியவர்கள் வேறு ஏதாவது காரணத்துக்காகத் தாக்கினரா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
from தேசிய செய்திகள் https://ift.tt/uvIixF4
0 Comments