சரிதா நாயருக்கு 2018-ம் ஆண்டிலிருந்து ஸ்லோ பாய்சன் கொடுத்த டிரைவர்? - குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை

கேரள மாநிலத்தில், காங்கிரஸ் கட்சியின் உம்மன் சாண்டி முதல்வராக இருந்த சமயத்தில் சோலார் பேனல் மோசடி வழக்கு மூலம் பிரபலமானவர் சரிதா நாயர். அது சம்பந்தமான வழக்கு பல்வேறு கோர்ட்டுகளில் நடைபெற்றுவருகிறது. குறிப்பாக, கேரளாவில் சி.பி.எம் ஆட்சிக்கு வந்த பிறகு சோலார் மோசடி குறித்து தீவிர விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில் சரிதா நாயருக்கு அவரின் கார் டிரைவரான வினு குமார் 2018-ம் ஆண்டிலிருந்தே ஸ்லோ பாய்சன் கலந்து கொடுத்ததாகப் பரபரப்பு புகார் எழுந்திருக்கிறது. இது குறித்து சரிதா நாயர் கொடுத்த புகாரின் அடிப்படையில், கடந்த நான்கு மாதங்களாக விசாரணை நடத்திய குற்றப்பிரிவு போலீஸார், டிரைவர் வினுகுமார் மீது வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

சரிதா நாயர்

இது குறித்துப் பேசிய சரிதா நாயர், "2018-ம் ஆண்டு முதல் என்னுடைய உடலில் ஆங்காங்கே தடிப்பு ஏற்பட்டது. அதன் பிறகு நரம்பு சம்பந்தமான பிரச்னைகள் ஏற்பட்டன. மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சென்றபோது என்னுடைய உடலில் ஆர்செனிக், மெர்க்குரி, லெட் போன்ற ரசானங்களின் தன்மை தெரிந்தது. அதன் பிறகு திருவனந்தபுரத்தில் தனியார் மருத்துவமனையில் ஹீமோதெரபி சிகிச்சை செய்தேன். அதன் பிறகும் சரியாகாததால் அதைவிட உயர் சிகிச்சைக்கு டாக்டர்கள் பரிந்துரைத்திருக்கின்றனர். இப்போது திருவனந்தபுரத்திலும், வேலுரிலும் சிகிச்சை எடுத்துவருகிறேன்.

ஹீமோதெரபி சிகிச்சையால் தலைமுடி அதிக அளவு உதிர்ந்துவிட்டது. ரசானங்கள் உடலுக்குள் சென்றதால் இடது கண்ணில் பார்வை குறைந்திருக்கிறது. இடது கால் பாதிக்கப்பட்டிருக்கிறது. 2018-ம் ஆண்டு முதல் என் உடலில் பிரச்னை இருந்துவருகிறது. ஆனால், இந்த ஆண்டு, ஜனவரி மாதம் கரமனா பகுதியில் ஒரு ஜூஸ் கடையில் வைத்து எனக்கு வாங்கிய ஜூஸில் டிரைவர் வினுகுமார் ஏதோ பொடியைக் கலப்பதைக் கண்டேன். அதன் பிறகு, அந்த ஜூஸை நான் குடிக்காமல் கீழே விட்டேன். நான் ஜூஸ் குடித்த கிளாஸ் எங்கே என வினுகுமார் என்னிடம் கேட்டதால் எனக்குச் சந்தேகம் வலுத்தது. அதைத் தொடர்ந்து அவரை வேலையிலிருந்து நீக்கினேன்.

சரிதா நாயர்

என் வழக்கு சம்பந்தமாக குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்த எதிரிகள் டிரைவர் வினுகுமாருடன் நட்பாக இருப்பது எனக்குத் தெரியவந்தது. அவர்களின் தூண்டுதலின்பேரில் வினு குமார் என்னைச் சிறுகச் சிறுகக் கொலைசெய்யும் திட்டத்துடன் ரசாயனங்களை உணவில் கலந்து தந்திருக்கலாம் எனக் கருதுகிறேன். மீண்டும் பழைய சரிதாவாக மாற முடியாத நிலையில் இருக்கிறேன்" என்றார். இந்த வழக்கு சம்பந்தமாக சரிதா நாயருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களிடமும் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். சோலார் பேனல் வழக்கு மூலம் நாடு முழுவதும் பிரபலமான கேரளத்தின் சரிதா நாயருக்கு அவரின் டிரைவரே ஸ்லோ பாய்சன் கொடுத்ததாக வழக்கு பதிவுசெய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.



from தேசிய செய்திகள் https://ift.tt/ku6O8XZ

Post a Comment

0 Comments