`பேய் என எதுவும் கிடையாது!'- மூடநம்பிக்கையை போக்க சுடுகாட்டில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய நபர்

பேய் என்றால் பயப்படாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால் அது போன்ற ஒன்று இல்லை என்று மூடநம்பிக்கைகளுக்கு எதிரான பிரசாரமும் ஒரு பக்கம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. மும்பை அருகிலுள்ள கல்யாண் என்ற இடத்தைச் சேர்ந்த கவுதம் மோரே என்பவர் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடி வருகிறார். பேய் போன்ற எதுவும் இல்லை என்று நிரூபிப்பதற்காக கவுதம் தன்னுடைய 44-வது பிறந்த நாளை சுடுகாட்டில் கொண்டாட முடிவு செய்தார். இது குறித்த தனது முடிவை குடும்பத்தினரிடம் தெரிவித்தபோது, அவர்களும் அதனை ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து சுடுகாட்டில் பிறந்தநாள் கொண்டாட ஏற்பாடுகள் தீவிரமடைந்தன. கவுதம் தன்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களை பிறந்தநாள் பார்ட்டிக்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தார். அவரின் அழைப்பை ஏற்று நூற்றுக்கணக்கானோர் சுடுகாட்டில் நடந்த பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துகொண்டனர். கவுதம் சுடுகாட்டில் கேக் வெட்டி தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். விழாவுக்கு வந்திருந்த அனைவருக்கும் பிரியாணி பரிமாறப்பட்டது.

சுடுகாட்டில் பிரியாணி

இது குறித்துப் பேசிய கவுதம், ``பிறந்தநாளை ஏதாவது ஒரு ஹோட்டலில் நடத்தலாம் என்று என் குடும்பத்தினர் தெரிவித்தனர். ஆனால் பேய் போன்ற மூடநம்பிக்கைகளை கண்மூடித்தனமாக நம்புபவர்களுக்காக என்னுடைய பிறந்தநாளை சுடுகாட்டில் கொண்டாடினேன்" என்று தெரிவித்தார். இந்த விழாவில் கலந்துகொண்ட கவுதம் நண்பர் ஆனந்த் ஷிண்டே, ``சுடுகாட்டில் பிறந்தநாள் பார்ட்டி கொண்டாட வரும்படி அவன் கேட்டபோது, முதலில் போவதா வேண்டாமா என இரண்டு மனநிலையில் இருந்தேன். ஆனால் அந்த பார்ட்டியில் கலந்துகொண்டபோது சந்தேகப்பட்டபடி எதுவும் நடக்கவில்லை" என்று தெரிவித்தார். மூடநம்பிகைகளுக்கு எதிராகப் போராடும் அமைப்பில் கவுதம் ஒரு உறுப்பினராக இருக்கிறார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/kVxKj7B

Post a Comment

0 Comments