பெரும்பாலும் பிறந்தநாள் கொண்டாட்டத்தை, வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ, பொது வெளியிலோ வைத்து கொண்டாடுவது வழக்கம். ஆனால் ஒரு நபர் தனது பிறந்தநாளை சுடுகாட்டில் கொண்டாடியிருக்கிறார்.
மும்பையைச் சேர்ந்தவர் கௌதம் மோர். மகாராஷ்ட்ரா அந்தஷ்ரத்தா நிர்மூலன் சமிதியின் உறுப்பினரான கௌதம் மோர் தனது 44 ஆவது பிறந்தநாளை, இறந்த உடலை தகனம் செய்யும் இடமான சுடுகாட்டில் வைத்துக் கேக் வெட்டியும் , விருந்து வைத்தும் கொண்டாடி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் பேசும்போது, `` எனது பிறந்தநாளை ஹோட்டலில் வைத்து கொண்டாடலாம் என்று எனது குடும்பத்தினர் எனக்கு அறிவுறுத்தினர். ஆனால் நான் சுடுக்காட்டில் வைத்து எனது பிறந்தநாளைக் கொண்டாட முடிவு செய்தேன். காரணம் பேய்கள் போன்ற விஷயங்கள் எதுவும் சுடுகாட்டில் இல்லை. அசம்பாவித சம்பவங்கள் எதுவும் அங்கு நடக்காது.
சுடுகாடும் எல்லா இடங்களையும் போன்ற ஒரு சாதாரண இடம்தான் என்பதை மக்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும். சுடுகாடு குறித்து அனைவருக்கும் இருக்கும் மூட நம்பிக்கைகளை போக்கி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும்தான் நான் சுடுக்காட்டில் வைத்து எனது பிறந்தநாளை கொண்டாட முடிவு செய்தேன் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
மேலும் பிறந்தநாள் கொண்டாடத்தில் கலந்து கொண்ட அவரின் நண்பர் ஆனந்த் ஷிண்டே கூறுகையில், ``கௌதம் மோர் என்னை பிறந்தநாள் கொண்டாடத்திற்கு அழைத்தப்போது எனக்கு சுடுகாடு தொடர்பான மூட நம்பிக்கைகளை நான் நம்பிக்கொண்டிருந்ததால் முதலில் கொண்டாட்டத்திற்கு செல்லலாமா? அல்லது வேண்டாமா? என இரு மனநிலையில் இருந்தேன். அதன்பின் சுடுகாட்டிற்கு சென்று பிறந்தநாள் கொண்டாடத்தில் கலந்துக்கொண்ட நான் , இதற்கு முன் நான் புரிந்துக்கொண்டது அனைத்தும் தவறு என்பதை உணர்ந்தேன் என்று தெரிவித்திருக்கிறார்.
கௌதம் மோர் தனது 44 - வது பிறந்தநாளை தன் குடும்பத்துடனும் , நண்பர்களுடனும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சுடுகாட்டில் வைத்து கொண்டாடிய இச்சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
from தேசிய செய்திகள் https://ift.tt/WwKVj7E
0 Comments