உ.பி: கிராம பணிகள் குறித்து ஆர்.டி.ஐ மூலம் தகவல் கோரிய இளைஞர் அடித்துக் கொலை! - 8 பேரை தேடும் போலீஸ்

உத்தரப்பிரதேச மாநிலம், அலிகார் மாவட்டம், கோரை கிராமத்தைச் சேர்ந்தவர் தேவ்ஜீத் சிங் (32). இவர் தன்னுடைய தந்தை மகேந்திர சிங்கின் விவசாய வேலைகளுக்கு உதவியாகவும், கிராமத்தில் கணினி மையத்தையும் நடத்தி வந்தார். இவருக்குத் திருமணமாகி மனைவி, இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில், தங்கள் விவசாய நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்த தேவஜீத் சிங்கையும், அவர் சகோதரரையும் ஒரு கும்பல் திடீரென சரமாரியாகத் தாக்கியிருக்கிறது.

இது குறித்து தேவ்ஜீத் குடும்பத்தாருக்கு கிராமவாசி ஒருவர் தகவல் தெரிவித்திருக்கிறார். அந்தப் பகுதிக்கு விரைந்த தேவஜீத் சிங்கின் தந்தை மகேந்திர சிங், இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், தேவ்ஜீத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் அவர் தந்தை மகேந்திர சிங் புகார் அளித்திருக்கிறார்.

கொலை

அந்தப் புகாரில், ``கிராமத்தின் நடைபெற்ற வளர்ச்சிப் பணிகளின் தரம் குறித்த தகவல்களைக் கோரி என்னுடைய மகன் இரண்டு மாதங்களுக்கு முன்பு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுத்தாக்கல் செய்திருந்தான். கிராமத்தில் கட்டுமானப் பணிகளுக்கு தரமற்ற பொருள்கள் பயன்படுத்தப்படுவதாகக் கூறி பல்வேறு அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியிருந்தான். அதிலிருந்து, எங்களுக்குக் கொலை மிரட்டல் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில், என்னுடைய இரண்டு மகன்களும் கொடூரமாகத் தாக்கப்பட்டு அதில் தேவ்ஜீத் சிங் இறந்துவிட்டான். இன்னொரு மகன் சிகிச்சையில் இருக்கிறான். குற்றவாளிகள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

காவல்துறை

இந்தச் சம்பவம் தொடர்பாகப் பேசிய காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ராகவேந்திர சிங், "இந்தப் புகாரில் கிராம தலைவர் தேவேந்திர சிங், அவர் மகன் கார்த்திக் உட்பட 8 பேர்மீது 302 (கொலை), 147 (கலவரம்), 506 (கலவரம்), 506 (ஐபிசி) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் தலைமறைவாக இருக்கின்றனர். அவர்களைக் கைதுசெய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" எனத் தெரிவித்திருக்கிறார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/7xlZekb

Post a Comment

0 Comments