கர்நாடகாவில் சக்கரத்தின் அச்சு முறிந்து, தேர் கவிழ்ந்து விபத்து - 5 பேர் காயம்!

கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகரம் மாவட்டத்தில் உள்ள சென்னப்பன்புரம் கிராமம் தமிழக எல்லையான தாளவாடியில் இருந்து 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள வீரபத்ரேஸ்வரர் கோயில் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.  
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக தேர்த்திருவிழா ரத்து செய்யப்பட்டு பூஜைகள் மட்டுமே நடைபெற்றன.

தேர் கவிழ்வதால் சிதறி ஓடும் பக்தர்கள்.

அதனால் இந்த ஆண்டு தேர்த்திருவிழாவை விமரிசையாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டு நேற்று காலையில் தேர்த் திருவிழா தொடங்கி வைக்கப்பட்டது. சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின் பக்தர்களால் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.

முதலில் கோயிலைச் சுற்றி தேரோட்டம் நடைபெற்றது. பக்தர்களால் இழுந்து வரப்பட்ட தேர் சிறிது தூரம் ஓடிய பின் எதிர்பாராத விதமாக கவிழ்ந்தது. தேர் கவிழ்ந்ததை பார்த்த பக்தர்கள் சிதறி ஓடி தப்பினர். இருப்பினும், தேரின் அடியில் 5 பேர் சிக்கிக் கொண்டனர். உடனடியாக ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து, கீழே கவிழ்ந்த தேரை தூக்கி நிறுத்தினர். அப்போதுதான் தேரின் ஒரு சக்கரம் உடைந்து போனது தெரிய வந்தது.

அச்சு முறிந்த தேர்ச் சக்கரம்.

தேரின் இடிபாடுகளில் சிக்கிய 5 பேரும் மீட்கப்பட்டு சாம்ராஜ்நகரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஊர் மக்கள் விரைந்து செயல்பட்டு தேரை தூக்கி நிறுத்தியதால் அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் பக்தர்கள் உயிர் தப்பினர்.

நீண்ட நாள்களாக நிலை நிறுத்தப்பட்ட தேரின் சக்கரங்கள் முறையாக பராமரிக்காததால் தான் சக்கரத்தின் அச்சு முறிந்து இந்த விபத்து ஏற்பட்டதாகவும், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் நேரிடாமல் தங்களை வீரபத்ரேஸ்வர சுவாமி காப்பாற்றி விட்டதாக அந்த கிராம பக்தர்கள் நிம்மதி தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள சாம்ராஜ் நகரம் தாலுகா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



from தேசிய செய்திகள் https://ift.tt/dAgpMsX

Post a Comment

0 Comments