கேரள மாநிலம் திருவனந்தபுரம் யு.ஏ.இ தூதரக பார்சல் வழியாக தங்கம் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஸ்வப்னா சுரேஷ் தனது சுயசரிதையான 'சதியுடே பத்மவியூகம்' என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். திருச்சூர் கரண்ட் புக்ஸ் பதிப்பகம் அச்சிட்டுள்ள அந்த புத்தகம் நேற்று வெளியானது. அந்த புத்தகத்தில் தனது தனிப்பட்ட வாழ்வில் சிவசங்கருடன் ஏற்பட்ட உறவு குறித்தும், சிவசங்கர் தன்னை திருமணம் செய்துகொண்ட பந்தம் குறித்தும் ஸ்வப்னா சுரேஷ் விரிவாக கூறியுள்ளார். 250 ரூபாய் விலையுள்ள அந்த புத்தகத்தில் 13 அத்தியாயங்கள் உள்ளன. 7-ம் அத்தியாயத்தில் இருந்து தங்கம் கடத்தல் வழக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளராக இருந்த சிவசங்கர் ஐ.ஏ.எஸ் தன்னை திருமணம் செய்துகொண்டது போன்ற முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இது ஆர்ட்டிக்கிள் 164 படி கோர்ட்டில் கூறிய ரகசிய வாக்குமூலத்தின் முழு வடிவம் என புத்தகத்தின் முதல் பக்கத்திலேயே தெளிவுபடுத்தியுள்ளார் ஸ்வப்னா.
சுமார் 150 பக்கங்கள் கொண்ட அந்த புத்தகத்தில் சிவசங்கருடன் சேர்ந்து இருக்கும் பர்சனல் புகைப்படங்களையும் புத்தகத்தில் வண்ணப் படங்களாக பிரசுரித்துள்ளனர். இதில் முதல்வர் பினராயி விஜயனும், அவரின் குடும்பத்தினரும் செய்த மோசடிகள் பற்றியும் சில விஷயங்களை தெரிவித்துள்ளார். அதில், `சிவசங்கரின் பார்வதி' என தனது கையில் பச்சைக்குத்திக்கொண்ட ஸ்வப்னா அந்த போட்டோவையும் புத்தகத்தில் பிரிண்ட் செய்துள்ளார். சிவசங்கர் கட்டிய தாலி, அவர் வாங்கிக்கொடுத்த சேலை ஆகியவற்றை ஸ்வப்னா சுரேஷ் அணிந்து நிற்கும் புகைப்படங்களும், பிறந்த நாள் கொண்டாட்டங்களின் புகைப்படங்களும், சிவசங்கருடன் தனிப்பட்ட முறையில் சாட் செய்த மெசேஜ்களின் ஸ்கிரீன் ஷாட்களும் புத்தகத்தில் படமாக சேர்க்கப்பட்டுள்ளன.
யு.ஏ.இ தூதரகத்தில் தனக்கு தேவையானதை நிறைவேற்றிக்கொள்ள சிவசங்கரன் தன்னை பயன்படுத்திக்கொண்டதாகவும். தூதரகத்தில் சிவசங்கர் என்னென்ன செய்தார் என்பதையும் புத்தகத்தில் விவரித்துள்ளார் ஸ்வப்னா சுரேஷ். முதல் பதிப்பாக ஐந்தாயிரம் புத்தகங்கள் வெளியிட்ட நிலையில் அவை அனைத்தும் விற்று தீர்ந்து விட்டதாகவும், அடுத்த பதிப்பு அச்சடித்துக்கொண்டிருப்பதாகவும் கரண்ட் புக்ஸ் பதிப்பகத்தினர் கூறியுள்ளனர்.
from தேசிய செய்திகள் https://ift.tt/7pak8QU
0 Comments