`பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம்; முற்றிலுமாக தீவிரவாதத்தை ஒழிப்போம்!' - அமித் ஷா காட்டம்

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய நாள்முதலே, மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசை இன்றுவரை, ஜம்மு-காஷ்மீர் அரசியல் தலைவர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். அதோடு, பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவல் மற்றும் சமீபத்தில் தொடர்ச்சியாக நடந்த பொதுமக்கள் படுகொலைகள் என தொடர்ந்து மத்திய அரசை அவர்கள் சாடிவருகின்றனர்.

ஜம்மு - காஷ்மீர்

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரில் மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாகிஸ்தானுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தமாட்டோம் என்றும், தீவிரவாதத்தை முற்றிலுமாக ஒழிப்போம் என்றும் தெரிவித்திருக்கிறார்.

பாராமுல்லா மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமித் ஷா, ``சிலர் பாகிஸ்தானுடன் பேச வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால், நாங்கள் ஏன் பாகிஸ்தானுடன் பேச வேண்டும்... நாங்கள் பேச மாட்டோம். காஷ்மீர் மக்களுடனும், பாரமுல்லா மக்களுடனும் நாங்கள் பேசுவோம்.

அமித் ஷா

பயங்கரவாதத்தை நாங்கள் சகித்துக் கொள்ள மாட்டோம். நரேந்திர மோடி அரசாங்கம், ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தை முற்றிலுமாக ஒழித்து, அதனை இந்தியாவின் சொர்க்கமாக பார்க்க விரும்புகிறது. அதோடு, ஜம்மு-காஷ்மீரை நாட்டிலேயே மிகவும் அமைதியான இடமாக மாற்ற நாங்கள் விரும்புகிறோம்" எனத் தெரிவித்தார்.

மேலும் மெகபூபா முஃப்தி, ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா மற்றும் காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா, ``அவர்களின் ஆட்சி, ஊழல், தவறான நிர்வாகம் மற்றும் வளர்ச்சியின்மை நிறைந்தவை. ஜம்மு காஷ்மீர் மக்களின் நலனுக்காக அவர்கள் எதுவும் செய்யவில்லை" எனக் கூறினார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/A4t9c0L

Post a Comment

0 Comments