நாட்டிலேயே மும்பை கிரிக்கெட் அசோசியேஷன் மிகவும் முக்கியமான கிரிக்கெட் அமைப்பாகும். இதன் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது. இத்தேர்தலில் வெற்றி பெற அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒரு அணியில் சேர்ந்துள்ளனர். தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜிதேந்திர அவாத், உத்தவ் தாக்கரேயின் சிவசேனாவைச் சேர்ந்த மிலிந்த் நர்வேகர் ஆகியோர் கமிட்டி உறுப்பினர் பதவிக்கு ஒரே அணியில் போட்டியிடுகின்றனர். இதில் ஜிதேந்திர அவாத் சரத் பவாருக்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார். அதே போன்று மிலிந்த் நர்வேகரும் உத்தவ் தாக்கரேயிக்கு மிகவும் விசுவாசமானவர். அதே அணியில் தலைவர் பதவிக்கு துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு மிகவும் நெருக்கமான தொழிலதிபர் அமோல் கோலே போட்டியிடுகிறார். இது தவிர மும்பை பாஜக தலைவர் அசிஷ் ஷெலார், ஏக்நாத் ஷிண்டே அணி எம்.எல்.ஏ பிரதாப் சர்நாயக் மகன் விஹாங்க் சர்நாயக் ஆகியோரும் இதே அணியில் களத்தில் இருக்கின்றனர். இவர்களுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் ஆதரவு இருக்கிறது.
சரத் பவார் மும்பை கிரிக்கெட் அசோசியேஷன் தலைவராக பல ஆண்டுகள் இருந்திருக்கிறார். இதனால் 300-க்கும் மேற்பட்ட கிரிக்கெட் கிளப்களுடன் சரத் பவாருக்கு நல்ல தொடர்பு இருக்கிறது. இந்த கிரிக்கெட் கிளப்கள்தான் தேர்தலில் வாக்களிக்க இருக்கின்றன. நாளை தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் சரத் பவார், தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் இன்று கூடி முக்கிய ஆலோசனை நடத்த இருக்கின்றனர். அரசியலில் எதிரிகளாக இருப்பவர்களுடன் கூட்டணி வைத்திருப்பது குறித்து கேட்டதற்கு, ``கிரிக்கெட்டில் அரசியலுக்கு இடமில்லை" என்று சரத் பவார் தெளிவுபடுத்தி இருக்கிறார். சரத் பவாரின் ஆதரவாளர் ஜிதேந்திர அவாத் இது குறித்து கூறுகையில், ``இது அரசியல் கிடையாது. விளையாட்டுக்காக பலரும் பல ஆண்டுகளாக பணியாற்றி இருக்கலாம். அவர்கள் வெவ்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களாக இருக்கலாம். ஆனால் எங்களது நோக்கம் விளையாட்டை மேம்படுத்துவதாக இருக்கிறது" என்று தெரிவித்தார். அரசியல்வாதிகளின் அணியை எதிர்த்து கிரிக்கெட் வீரர் சந்தீப் பாட்டீல் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். அரசியலில் எதிரிகள் என்றாலும் பதவிக்காக அனைத்துக்கட்சிகளும் ஒரே அணியில் திரண்டிருப்பது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
from தேசிய செய்திகள் https://ift.tt/PbHI7od
0 Comments