உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டாவில் பா.ஜ.க பிரமுகரான ஸ்ரீகாந்த் தியாகி என்பவர், ஒரு பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டு அந்தப் பெண்ணைத் தாக்கியதற்காக, குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டார். இந்த வழக்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கில் ஸ்ரீகாந்த் தியாகி தரப்பு வக்கில், ``காவல்துறை போட்டியின் காரணமாக, ஸ்ரீகாந்த் தியாகி தவறாக சிக்க வைக்கப்பட்டார்" என்று வாதிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி சுரேந்திர சிங் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு அவருக்கு ஜாமீன் வழங்கினார்.
ஜாமீனில் வெளிவந்த பா.ஜ.க பிரமுகருக்கு மாலை அணிவித்து, பூக்கள் தூவி அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகின்றன. இது குறித்துப் பேசிய ஸ்ரீகாந்த் தியாகி, "இந்த வழக்கு தொடர்பாக வேறு எந்தவொரு பெரிய நடவடிக்கையும் எடுப்பதற்கு முன்பு என்னுடைய ஆதரவாளர்களைச் சந்தித்துப் பேசுவேன். மக்கள் எனக்கும் என்னுடைய குடும்பத்தினருக்கும் ஆதரவாக நின்றிருக்கின்றனர். அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அலகாபாத் உயர் நீதிமன்றம் எனக்கு ஜாமீன் வழங்கியிருக்கிறது. மேலும், நீதிமன்றத்தின் தீர்ப்பு எல்லாவற்றுக்கும் மேலானது" எனத் தெரிவித்திருக்கிறார்.
அதே சமயம், ஸ்ரீகாந்த் தியாகி பூக்கள் தூவி வரவேற்கப்பட்டதற்கு சமூக வலைதளங்களில் கண்டனங்களும் வலுத்துவருகின்றன. இந்த வீடியோவுக்கு கருத்து தெரிவித்த சிலர், ``பாதிக்கப்பட்ட பெண்ணின் நிலை என்னவாகுமோ?" என அச்சம் தெரிவித்துவருகின்றனர். இதற்கு முன்னர், ஶ்ரீகாந்த் தியாகிக்கு தாக்குதல், போலியான ஆவணங்களைத் தயாரித்தல் உள்ளிட்ட குற்றங்களில் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
from தேசிய செய்திகள் https://ift.tt/CSvbVwU
0 Comments