இந்தியாவின் வடக்கு எல்லை மாநிலமான ஜம்மு-காஷ்மீரில், அவ்வப்போது தீவிரவாதிகளால் காஷ்மீர் பண்டிட்கள் கொல்லப்படுவது பலகாலமாக விவாதமாகவே இருக்கிறது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கூட, ஷோபியான் மாவட்டத்தில் காஷ்மீர் பண்டிட் பூரன் கிரிஷன் பட் என்பவர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதுதொடர்பாக, காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, ``இது நிற்கப்போவதில்லை, நீதி கிடைக்கும் வரை இது தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்" என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான், பண்டிட்களின் கொலை தொடர்பாக, ``ஒரு இந்தியான இருப்பதில் நான் வெட்கப்படுகிறேன்" எனப் பேசியிருக்கிறார்.
ஆளுநர் ஆரிஃப் முகமது கான், உத்தரப்பிரதேச மாநிலம், புலந்த்ஷாஹரிலுள்ள பங்கர் கிராமத்தில் நடைபெற்ற டாக்டர். அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்டார். அப்போது அங்கு காஷ்மீர் பண்டிட்கள் கொல்லப்படுவது குறித்துக் கேட்கப்பட்டதற்குப் பதிலளித்த ஆரிஃப் முகமது கான், ``ஒரு அப்பாவி கொல்லப்படுவதை விடப் பெரிய குற்றம் எதுவும் இருக்க முடியாது. இதில், ஒரு இந்தியான இருப்பதில் நான் வெட்கப்படுகிறேன். என்னுடைய நாட்டைச் சேர்ந்த ஒருவர், தன்னுடைய வீட்டை விட்டு வெளியேறி அகதியாக மாற நேரிட்டால், அதை விடப் பெரிய அவமானம் கிடையாது" என்று கூறினார்.
மேலும், ஃபரூக் அப்துல்லாவின் கூற்று குறித்துப் பேசியபோது, ``என்னுடைய பதவியின் கண்ணியத்தைக் கருத்தில் கொண்டு எந்த அரசியல் விஷயத்திலும் கருத்து தெரிவிக்க மாட்டேன்" என ஆரிஃப் முகமது கான் தெரிவித்தார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/jiqUftX
0 Comments