50 அடி வாள், புதிய கொடி, 2.5 லட்சம் பேருக்கு சாப்பாடு; தசரா பொதுக்கூட்ட பணிகளில் ஷிண்ட அணி தீவிரம்!

மும்பையில் ஒவ்வோர் ஆண்டும் தசராவன்று சிவசேனா சார்பாக தாதர் சிவாஜி பார்க்கில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கட்சி தொடங்கியதிலிருந்தே இந்தக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் மாதம் சிவசேனா இரண்டாக உடைந்துவிட்டது. ஏக்நாத் ஷிண்டே தலைமையில் புதிய அணி உருவாகியிருக்கிறது. பா.ஜ.க-வின் துணையோடு சிவசேனா எம்.எல்.ஏ-க்களை தங்கள் பக்கம் இழுத்துக்கொண்ட ஏக்நாத் ஷிண்டே மாநிலத்தில் முதல்வராக பதவியேற்றிருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளில் பல முறை சிவசேனா கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முயன்று தோற்றுப்போன பா.ஜ.க, இறுதியாக முதல்வர் பதவி போனாலும் பரவாயில்லை என்ற முடிவோடு ஏக்நாத் ஷிண்டேவை தங்கள் பக்கம் இழுத்து மாநிலத்தில் ஆட்சி அமைத்திருக்கிறது. துணைமுதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் இருந்தாலும் உண்மையான முதல்வராக பட்னாவிஸ்தான் இருக்கிறார்.

உத்தவ், ஷிண்டே

தற்போது சிவசேனாவின் சின்னமான வில் அம்புக்கு இரு அணிகளிடையே போட்டி ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக இரு தரப்பினரும் தேர்தல் கமிஷனில் மனுத்தாக்கல் செய்திருக்கின்றனர். வரும் நவம்பர் மாதம் 6-ம் தேதி மும்பையில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. அதற்குள் இந்த விவகாரத்தில் தேர்தல் கமிஷன் முடிவு எடுக்குமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

தற்போது மும்பையில் இன்று மாலை நடக்கும் தசரா பொதுக்கூட்டத்தை யாருக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது என்பதை நிரூபிக்கும் ஒரு வாய்ப்பாக இரு அணிகளும் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றன. கோர்ட் மூலம் உத்தவ் தாக்கரே தாதர் சிவாஜி பார்க்கில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வாங்கியிருக்கிறார். அங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸ் எம்.எம்.ஆர்.டி.ஏ மைதானத்தில் ஏக்நாத் ஷிண்டே பொதுக்கூட்டம் நடத்தவிருக்கிறார். இந்தப் பொதுக்கூட்டத்துக்கு ஷிண்டே அணியினர் 3 லட்சத்துக்கும் அதிகமான தொண்டர்களை திரட்ட திட்டமிட்டிருக்கின்றனர். ஏக்நாத் ஷிண்டே தன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ஒவ்வொருவரும் குறிப்பிட்ட அளவு ஆட்களை அழைத்து வரவேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்.

ஏக்நாத் ஷிண்டே இந்தப் பொதுக்கூட்டத்தில் தனது கட்சிக்கு புதிய கொடியை அறிமுகம் செய்யவிருக்கிறார். இது தவிர ஷிண்டேவைப் பாராட்டி கட்சி பாடல் ஒன்றையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கின்றனர். இருவருமே இரவு 10 மணிக்குள் பொதுக்கூட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்த முறை உத்தவ் தாக்கரே மட்டுமல்லாது தசரா பொதுக்கூட்டத்தில் ஆதித்ய தாக்கரேவும் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு புறநகர்ப் பகுதியிலுள்ள மீனவர்கள் அனைவரும் உத்தவ் தாக்கரே பொதுக்கூட்டத்துக்குச் செல்வோம் என்று தெரிவித்திருக்கின்றனர். ஏக்நாத் ஷிண்டே தனது தொகுதியான தானேயிலிருந்து கணிசமான ஆட்களை கொண்டுவர தேவையான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்.

ஷிண்டேவின் பொதுக்கூட்டத்தில் 50 அடி நீளமான வாள் ஒன்று பார்வைக்கு வைக்கப்பட இருக்கிறது. கூட்டத்துக்கு வரும் தொண்டர்களுக்கு வழங்குவதற்காக 2.5 லட்சம் உணவு பார்சல்கள் ஆர்டர் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஒரே நேரத்தில் இரண்டு பொதுக்கூட்டங்கள் நடப்பதால் பாந்த்ரா மற்றும் தாதருக்குச் செல்லும் சாலைகளில் போக்குவரத்துக்கு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.

இந்தப் பொதுக்கூட்டத்துக்கு தொண்டர்களை அழைத்து வர சிறப்பு ரயில்கள், 5 ஆயிரம் பஸ்கள், சுற்றுலா வாகனங்களை இரு அணிகளும் ஏற்பாடு செய்திருக்கின்றன. இது குறித்து உத்தவ் தாக்கரே ஆதரவு சட்டமேலவை உறுப்பினர் அனில் பரப் கூறுகையில், ``தாதர் பொதுக்கூட்டம் ஒரு சாதாரண மேடைக்கூட்டம் மட்டுமல்ல. இது எங்கள் கலாசார கூட்டம்."

இந்தப் பொதுக்கூட்டத்துக்கு தொண்டர்களை அழைக்க ஏக்நாத் ஷிண்டே ஒரு டீசர் வெளியிட்டிருக்கிறார். அதில், பொதுக்கூட்டம் இந்துத்துவாவை முன்னெடுத்து செல்வதற்கானது என்றும், இது தனிப்பட்ட குடும்ப பொதுக்கூட்டம் இல்லை என்றும், பாலாசாஹேப் தாக்கரேவின் எண்ணங்களின் பொதுக்கூட்டம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தப் பொதுக்கூட்டங்களால் மும்பையில் பாதுகாப்புக்கு பல ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டிருக்கின்றனர். சிவசேனா ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து இப்போதுதான் முதன்முறையாக ஒரே நாளில் இரண்டு பொதுக்கூட்டங்கள் நடக்கின்றன.



from தேசிய செய்திகள் https://ift.tt/t0doJuq

Post a Comment

0 Comments