தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பத்மம் என்ற பெண் கடந்த 15 ஆண்டுகளாக எர்ணாகுளம் கடவந்தறா பகுதியில் வசித்துவந்தார். பல்வேறு வேலைகள் செய்துவந்த பத்மம், கடந்த ஆறு மாதங்களாக லாட்டரி விற்கும் வேலை செய்துவந்துள்ளார். கடந்த மாதம் (செப்டம்பர்) 26-ம் தேதி அவரது செல்போனுக்கு அவர் மகன் செல்வன் தொடர்புகொண்டுள்ளார். ஆனால் அவரது எண் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதனால் தர்மபுரியில் வசித்துவந்த செல்வன் மறுநாளே எர்ணாகுளம் சென்று கடவந்தறா காவல் நிலையத்தில் தாயைக் காணவில்லை எனப் புகார் அளித்தார். காணாமல்போன பத்மத்தின் செல்போன் லொக்கேஷனை போலீஸார் சோதித்தபோது பத்தனம்திட்டா மாவட்டம், திருவல்லாவில் கடைசியாகப் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. பின்னர் திருவல்லா பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை சோதித்தபோது பத்மத்தை கொச்சி பெரும்பாவூரைச் சேர்ந்த ஷிஹாப் என்ற ஷாஃபி கடத்திக்கொண்டு போனது தெரியவந்தது. ஷிஹாப்-பை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தியபோது திருவல்லாவை அடுத்த இலந்தூரில் வைத்தியசாலை நடத்திவரும் பகவல் சிங் - லைலா தம்பதியினரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றதாகத் தெரிவித்துள்ளார்.
போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தியபோது பகவல் சிங் - லைலா தம்பதியினர் பத்மத்தை நரபலி கொடுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. அது மட்டுமல்லாமல் இடுக்கி மாவட்டம், காலடியைச் சேர்ந்த ரோஸ்லி என்ற பெண்ணையும் அவர்கள் நரபலி கொடுத்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பகவல் சிங் வீட்டின் அருகிலேயே பாரம்பர்ய வைத்தியசாலை நடத்தி வருகிறார். மிகவும் பிரபலமான வைத்தியர் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மேலும், ஹைக்கூ கவிதைகள் எழுதி வெளியிட்டும் வந்துள்ளார். இவர் சி.பி.எம் கட்சியில் பொறுப்பிலும் இருக்கிறார். பகவல் சிங்கின் வீட்டுக்கு முன்பக்கம் காவு கோயில் ஒன்று உள்ளது. அந்தக் கோயிலில் வைத்து இந்தப் பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இது குறித்து முதற்கட்டமாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் ஐஸ்வர்யமும், செல்வமும் பெருக சில வழிமுறைகள் ஏற்படுத்திதரப்படும் என ஷிகாப் சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்ததாகக் கூறப்படுகிறது. அந்த விளம்பரத்தை பார்த்து ஷிகாப்பை வைத்தியார் பகவல் சிங் அழைத்துள்ளார். அவர்தான் நரபலி கொடுக்கும் ஐடியாவை கொடுத்துள்ளார். மேலும், ஷிகாப் பெண்களை காரில் அழைத்துக்கொண்டு பத்தனம்திட்டா மாவட்டம், இலந்தூருக்கு கொண்டுசென்றுள்ளார். பின்னர் அந்தப் பெண்களை கழுத்தை அறுத்து நரபலி கொடுத்ததுடன், உடலை துண்டு துண்டாக வெட்டி பூஜைகள் நடத்தி மண்ணில் புதைத்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுவரை ஷிகாப், வைத்தியர் பகவல்சிங், அவர் மனைவி லைலா ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். நரபலி கொடுக்கப்பட்ட பெண்களின் உடலை தோண்டி எடுத்து விசாரணை நடத்த போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுபோன்று வேறு எங்காவது நரபலி பயங்கரம் அரங்கேற்றப்பட்டுள்ளதா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
from தேசிய செய்திகள் https://ift.tt/bILqF0B
0 Comments