டெங்கு நோயாளிகளுக்கு செலுத்த போலி பிளாஸ்மா... உத்தரப்பிரதேசத்தில் 10 பேர் கைது!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கனமழை பெய்து முடித்ததையடுத்து, தற்போது டெங்கு காய்ச்சல் பரவிவருகிறது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பலருக்கு சிகிச்சைக்காக ரத்தத்தின் பிளாஸ்மா தேவை அதிகரித்திருக்கிறது. இதனை பயன்படுத்திக்கொள்ளும் சமுக விரோதிகள் போலியான ரத்த வங்கிகளை அமைக்கும் நிலை அதிகரித்திருக்கிறது.

Blood

சமீபத்தில் பிரயாக்ராஜ் பகுதியிலுள்ள ஒரு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டிருந்த பிரதீப் பாண்டே என்பவருக்கு, பிளாஸ்மாவுக்கு பதில் சாத்துக்குடி ஜூஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. ரத்தத்தின் பிளாஸ்மாவும், சாத்துக்குடி ஜூஸும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருப்பதால், போலி ரத்த வங்கியில் இருப்பவர்கள் இது போன்ற ஏமாற்று வேலையைச் செய்திருக்கிறார்கள்.

அதனால் பிரதீப் பாண்டே என்ற டெங்கு நோயாளி முறையான சிகிச்சையைப் பெற முடியாமல் இறந்திருக்கிறார். அதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டனர். மேலும், டெங்கு நோயாளிக்கு போலி பிளாஸ்மா விநியோகித்தது குறித்து விசாரிக்கக் குழு அமைக்கப்பட்டிருப்பதாக உத்தரப்பிரதேசத்தின் துணை முதலமைச்சர் ப்ரஜேஷ் பதக் தெரிவித்திருந்தார்.

காவல்துறை

இந்த நிலையில், டெங்கு நோயாளிகளின் குடும்பங்களுக்கு ரத்த பிளாஸ்மாவை விற்பனை செய்ததாக 10 பேரை பிரயாக்ராஜ் போலீஸார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக மாவட்ட காவல்துறைத் தலைவர் ஷைலேஷ் பாண்டே, ``சமீப நாள்களில் டெங்கு அதிகமாக பரவி, பிளேட்லெட் தேவையை அதிகரித்து வருகிறது. இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, பெரும்பாலான ஏழை மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

கைது

பிரயாக்ராஜில் கைது செய்யப்பட்ட 10 பேரும், ரத்த வங்கிகளில் இருந்து பிளாஸ்மாவை எடுத்து, அதிலிருந்து முறையற்ற பிளேட்லெட்டுகளாக பேக்கேஜிங் செய்து விற்று வந்திருக்கிறார்கள். பிளேட்லெட்டுகளாக ஜூஸை அனுப்புவது தொடர்பாகவும் விசாரித்தோம், ஆனால் முறையான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. இவர்களிடமிருந்து, பிளாஸ்மா பைகள், பணம், செல்போன்கள் மற்றும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது" எனத் தெரிவித்தார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/mdGngBf

Post a Comment

0 Comments