காவலாளிகளைக் குறிவைத்து கொல்லும் `Stone Man' - அச்சத்தில் மக்கள்... தீவிர விசாரணையில் ம.பி போலீஸ்!

மத்தியப் பிரதேச மாநிலம், சாகர் மாவட்டத்தில் மக்ரோனியா-பாந்த்ரா சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தில் வாட்ச்மேனாக பணியாற்றி வந்தவர் உத்தம் ரஜாக் (58). கடந்த மே மாதம், ரஜாக் தூங்கிக்கொண்டிருந்தபோது, தலையில் கல்லைப்போட்டு யாரோ அவரைக் கொலைசெய்தனர். ஆனால், இந்தக் கொலையில் குற்றவாளியை போலீஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்தக் கொலை நடந்து சில மாதங்களுக்குப் பிறகு, அண்மையில் கடந்த செவாய்க்கிழமை காலை சாகரின் கலை மற்றும் வணிகக் கல்லூரியின் பாதுகாவலர் ஷம்பு ஷரன் துபே (60) என்பவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது கல்லைப் போட்டுக் கொலைசெய்யப்பட்டார். கல்லூரி கேன்டீன் அருகே அவர் சடலமும், அதன் அருகே ரத்தம் தோய்ந்த கல் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது. மேலும், துபேவின் உடல் அருகே சிம் கார்டு இல்லாத ஒரு மொபைல் போன் இருப்பதைக் காவலர்கள் கண்டுபிடித்தனர்.

அந்த செல்போன், கடந்த சனிக்கிழமை பைன்சா பகுதியில் உள்ள ஒரு சிறிய தொழிற்சாலைக்கு அருகில் வேலை செய்து கொண்டிருந்த மற்றொரு பாதுகாவலரான கல்யாண் லோதி (57) என்பவருடையது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைக் கண்டுபிடிக்கும்போது கல்யாண் லோதி சுத்தியலால் அடித்துக் கொல்லப்பட்டிருந்தார். இந்த மூன்று கொலைகளுக்குப் பிறகும் கொலையாளி யார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸார் திணறினார்கள்.

கொலை

இந்த நிலையில், மோதி நகர்ப் பகுதிக்கு அருகே பணியிலிருந்தபோது காவலாளி மங்கள் அஹிர்வார் என்பவர் நான்காவது நபராக கல்லால் தாக்கப்பட்டிருக்கிறார். ஆனால், மங்கள் அஹிர்வார் உயிரிழக்கவில்லை என்றபோதும், தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை கொல்லப்பட்டவர்கள், தாக்கப்பட்டவர்கள் அனைவரும் காவலாளிகள் என்பதும், 50 வயதைத் தாண்டிய முதியவர்கள் என்பதும், கல்லால் தாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைத் தவிர, கொலையாளி குறித்த எந்த தகவலும் காவலர்களிடம் இல்லை.

காவல்துறை

இந்த நிலையில், இந்தத் தொடர் கொலைகள் குறித்து காவல்துறை தரப்பு, ``பெயர் அறியப்படாத அந்த கொலைக் குற்றவாளியை நாங்கள் `ஸ்டோன் மேன்' எனக் குறிப்பிடுகிறோம். இந்த தொடர் கொலைகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம். எங்களின் கூற்றுப்படி, அனைத்து கொலைகளையும் இணைக்கும் நூல்... தாக்குதலின் நேரம் (நடு இரவில்), பாதிக்கப்பட்டவர்கள் (வீடு அல்லது கட்டட வளாகத்தில் தூங்கும் பாதுகாப்பு காவலர்கள்), கொலை ஆயுதங்கள் (சுத்தி மற்றும் மழுங்கிய இரும்பு பொருள்கள்) ஆகியவை. இந்தக் குறிப்புகளை வைத்து, சாகர் காவல்துறை தலைமையகத்தில் கொலையாளியைப் பிடிக்கத் திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன. மேலும், கொலையாளி சைக்கோ அல்ல" எனவும் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

அடுத்தடுத்து நடந்த கொலைகள் அந்தப் பகுதியில் பீதியை ஏற்படுத்தியிருக்கிறது.



from தேசிய செய்திகள் https://ift.tt/GscOL1l

Post a Comment

0 Comments