கர்நாடகா மாநிலம், தொட்டபல்லாபூரில் கிருஷ்ணப்பா என்ற நபர் தெரு நாயை ஓட ஓட துரத்திச் சென்று கொலைசெய்திருக்கிறார். உள்ளூர்வாசிகள் அந்த நாய்க்கு 'ராக்கி' என்று பெயரிட்டு செல்லமாக அழைத்து வந்திருக்கின்றனர்.
கிருஷ்ணப்பா மதகொண்டனஹள்ளி கிராமத்தில் பன்றிப் பண்ணை நடத்தி வருகிறார். இந்த நிலையில், கடந்த சில தினங்களாக கிருஷ்ணப்பா அந்தப் பகுதிக்கு சென்று வரும்போதெல்லாம் `ராக்கி' என்ற அந்த தெரு நாய் அவரைப் பார்த்து குரைத்துக் கொண்டே இருந்திருக்கிறது.
அதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணப்பா, அந்த நாயைக் கொன்றுவிட திட்டமிட்டிருக்கிறார். வழக்கம்போல அந்தப் பகுதிக்குச் சென்ற கிருஷ்ணப்பாவை ராக்கி நாய் குறைத்தபடி துரத்தியிருக்கிறது. அதையடுத்து, கிருஷ்ணப்பா தான் கொண்டுவந்திருந்த துப்பாக்கியை எடுத்து நாயை சுட்டுக் கொன்றார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீஸில் புகாரளித்தனர்.
சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்த போலீஸார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து ஊடகங்களிடம் பேசிய போலீஸார், ``கிருஷ்ணப்பா தினமும் அந்த வழியாக நடந்து செல்லும்போது ஒவ்வொரு முறையும் இந்த நாய் அவரைப் பார்த்து குரைத்திருக்கிறது. இதனால் எரிச்சலடைந்த அவர், தனது துப்பாக்கியால் சுட முயன்றபோது, அந்த நாய் தப்பி ஓட முயன்றிருக்கிறது. இதையடுத்து, அவர் அந்த நாயை வெகு தூரம் துரத்திச் சென்று சுட்டுக் கொன்றுவிட்டார். நாயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றனர்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
from தேசிய செய்திகள் https://ift.tt/3XcA8Nm
0 Comments