மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் சப்னா என்ற பெண் பிறந்து 16 நாள்களே ஆன தன்னுடைய இரட்டைக் குழந்தைகளைக் கழுத்தை நெரித்துக் கொன்று, புதரில் வீசிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
குழந்தைகளைக் கொன்ற தாயே, போலீஸில் `என் குழந்தைகளைக் காணவில்லை, கண்டுபிடித்துக் கொடுங்கள்' என புகார் கொடுத்திருக்கிறார்.
அந்தப் புகாரில் அவர், ``செப்டம்பர் 23-ம் தேதி பெற்றோர் வீட்டுக்குச் செல்வதற்காக என்னுடைய குழந்தைகளுடன் வீட்டைவிட்டு வெளியேறினேன். அப்போது பொதுக் கழிப்பறைக்குச் செல்ல நடைபாதையில் என்னுடைய இரட்டைக் குழந்தைகளை விட்டுச் சென்றேன். திரும்பி வந்து பார்த்தபோது குழந்தைகளைக் காணவில்லை" எனக் குறிப்பிட்டிருந்திருக்கிறார். அந்தப் பெண்ணின் புகார் தொடர்பாக வழக்கு பதிவுசெய்த போலீஸார், நான்கு தினங்களாக குழந்தைகளை தேடி வந்தனர். இந்த நிலையில், குழந்தைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட பிறகு, சப்னா எதையோ மறைப்பதாக போலீஸாருக்குச் சந்தேகம் எழுந்தது. இது தொடர்பாக அவர்கள் விசாரிக்கத் தொடங்கினர்.
அப்போது சப்னா அதிர்ச்சிகர தகவல்களைத் தெரிவித்திருக்கிறார். சப்னா போலீஸில், ``என்னுடைய கணவருக்கு ஆறு மாதங்களாக வேலை கிடையாது. பொருளாதார சூழ்நிலை காரணமாக என்னுடைய இரண்டு மகன்களுக்கும் உணவளிக்க முடியாது என்று பயந்து கொலைசெய்து விட்டேன். எனக்கு ஒரு மகளும் இருக்கிறாள். மூன்று குழந்தைகளை எப்படி பார்த்துக்கொள்ள போகிறீர்கள் என மாமியார் என்னை கேலி செய்தார். அதனால்தான் இந்த முடிவெடுத்தேன்'' எனக் கூறியிருக்கிறார்.
அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸார், சப்னாவை கைதுசெய்தனர்.
from தேசிய செய்திகள் https://ift.tt/eH0nsq6
0 Comments