உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் வருமான வரித்துறை அலுவலகத்தில் வேலை செய்தவர் விமலேஷ் தீக்ஷித். இவர் திடீரென கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார். அவரை சோதித்த உள்ளூர் டாக்டர் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தி சான்றிதழ் கொடுத்திருக்கிறார். ஆனால் தீக்ஷித் குடும்பத்தினர் அவர் இறக்கவில்லை என்றும், கோமாவில் இருப்பதாகவும் நம்பினர். அதோடு தீக்ஷித் உடலை தங்களது வீட்டுக்குக் கொண்டு வந்து பாதுகாத்து வந்தனர். கோமாவிலிருந்து மீண்டுவிடுவார் என்று குடும்ப உறுப்பினர்கள் கருதினர். அவர் மனைவிக்கு சற்று மனநிலை சரியில்லை. அதனால், தீக்ஷித் உடலுக்கு அவர் மனைவி தினமும் கங்கை புனித நீரை தெளித்து வந்திருக்கிறார். இது ஒன்றரை ஆண்டுகளாக நடந்து வந்திருக்கிறது. சமீபத்தில் இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
உடனே போலீஸாரும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்துக்குச் சென்றனர். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தீக்ஷித் உயிரோடுதான் இருப்பதாக தெரிவித்தனர். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு குடும்பத்தினர் தீக்ஷித் உடலை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல அனுமதித்தனர். தீக்ஷித் உடல் மிகவும் அழுகிய நிலையில் இருந்தது. டாக்டர்கள் உடலை சோதித்துவிட்டு முறைப்படி இறந்ததாக அறிவித்தனர். தீக்ஷித் குடும்பத்தினர் பக்கத்து வீட்டிலும் தீக்ஷித் கோமாவில் இருப்பதாகவே தெரிவித்திருக்கின்றனர்.
வீட்டுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்களைக்கூட எடுத்துச் சென்றதை பக்கத்து வீட்டுக்காரர்கள் பார்த்திருக்கின்றனர். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர். வருமான வரித்துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. தீக்ஷித் இறந்த பிறகு அவர் மனைவி இன்னும் ஓய்வூதியமும் பெறவில்லை என்று வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
from தேசிய செய்திகள் https://ift.tt/TNaihBJ
0 Comments