கேரள மாநிலத்தில் பாரத் ஜோடோ யாத்ரா மேற்கொண்டுவருகிறார் ராகுல் காந்தி. கன்னியாகுமரியில் கடந்த 7-ம் தேதி நடை பயணத்தை தொடங்கிய ராகுல்காந்தி கடந்த 11-ம் தேதியில் இருந்து கேரள மாநிலத்தில் தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார். திருவனந்தபுரம், கொல்லம் மாவட்டங்களை தொடர்ந்து ஆலப்புழா மாவட்டத்தில் நேற்று நடை பயணத்தை தொடர்ந்தார். ஆலபுழாவில் மீன்பிடி தொழிலாளர்களை சந்தித்து உரையாடினார் ராகுல் காந்தி. பின்னர், புன்னமடகாயலில் வள்ளம்களி என்ற படகு போட்டியில் பங்கெடுத்தார். சுண்டன் வள்ளங்கள் கலந்துகொண்ட படகு போட்டியில் ராகுல் காந்தி ஒரு படகில் போட்டியாளர்களுடன் சேர்ந்து துடுப்புபோட்டு வள்ளம் செலுத்தினார். படகு செலுத்தும்போது உடன் துடுப்பு போட்டவர்களை ராகுல் உற்சாகப்படுத்தினார். ராகுல் அணியைச் சேர்ந்தவர்கள் செலுத்திய படகு முதலிடம் பிடித்து வெற்றிபெற்றது. ராகுல் காந்திக்கு வெற்றிக்கோப்பை பரிசாக வழங்கப்பட்டது.
ஆலப்புழா புன்னமடக்காயலில் 1952-ம் ஆண்டு அன்றைய பிரதமர் நேரு வள்ளம்களி பார்க்க வாதிருந்தார். அப்போது அவர் படகு போட்டியைக் கண்டு உற்சாகமாகி அவரும் போட்டியில் கலந்துகொண்டார். நடுபாகம் சுண்டன் வள்ளம் என்ற படகில் நேரு போட்டியில் கலந்துகொண்டார். இதனால் ஆலப்புழா படகு போட்டி 'நேரு ட்ராபி வள்ளம்களி' என அழைக்கப்படுகிறது. முன்னாள் பிரதமர் நேரு போட்டியில் கலந்துகொண்ட அதே நடுபாகம் சுண்டன் வள்ளத்தை ராகுல் காந்தி துடுப்பு போட்டு செலுத்தி படகு போட்டியில் கலந்துகொண்டது வள்ளம்களி வீரர்களுக்கு உற்சாகத்தை அளித்தது.
சுற்றுலாவுக்கு புகழ்பெற்ற ஆலப்புழாவில் சுற்றுலா தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை ராகுல் சந்தித்து பேசினார். பின்னர் ஆலப்புழாவில் மக்கள் மத்தியில் ராகுல்காந்தி பேசுகையில், "பாரத் ஜோடோ யாத்திரையை இடதுசாரி தலைவர்கள் பலர் ஆதரிக்கின்றனர். அவர்கள் தனி நபரை ஆதரிக்கவில்லை, ஒரு கருத்தை ஆதரிக்கின்றனர். முதலில் காரில் யாத்திரை மேற்கொள்ளலாம் என ஆலோசிக்கப்பட்டது. கார் யாத்திரை என்றால் அதில் நான் கலந்துகொள்ளமாட்டேன் எனக் கூறிவிட்டேன். காரில் செல்ல முடியாத ஆயிரக்கணக்கான மக்கள் நம் நாட்டில் உள்ளனர். எனவே அந்த மக்களுக்கு மதிப்புகொடுத்து நடை பயணம் நடத்த தீர்மானிக்கப்பட்டது" என்றார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/8C6IX5t
0 Comments