வீட்டின் முன் ஜப்தி நோட்டீஸ் தொங்கவிட்ட வங்கி அதிகாரிகள்; அவமானத்தில் தற்கொலை செய்த கல்லூரி மாணவி!

கேரள மாநிலம், கொல்லம் சூரநாடு பகுதியைச் சேர்ந்தவர் அஜி குமார். இவர் மனைவி சாலினி, மகள் அபிராமி (20). அபிராமி செங்கனூர் இருமாலிக்கர ஸ்ரீ ஐயப்பா கல்லூரியில் பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்துவந்தார். அஜிகுமார் வீடு கட்டுவதற்காக ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கேரளா பேங்க் என்ற கேரள மாநில கூட்டுறவு வங்கியில் 10 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருக்கிறார். வெளிநாட்டில் வேலை செய்த அஜிகுமார் கொரோனா காரணமாக வேலை இழந்து ஊருக்கு வந்திருக்கிறார். அவர் தந்தை சசிதரன் ஆசாரி ஒரு விபத்தில் சிக்கி படுத்தப் படுக்கையாகிவிட்டார். இதையடுத்து அவரால் லோன் தொகையை சரிவர செலுத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. கடந்த மார்ச் மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் செலுத்திய நிலையில் பாக்கி தொகையை செலுத்தும்படி வங்கியிலிருந்து அழைத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் அஜிகுமார், அவர் மனைவி மகள் அபிராமி ஆகியோர் நேற்று செங்கன்னூரில் ஒரு மரண வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். அந்த சமயத்தில் கேரளா வங்கி அதிகாரிகள் அஜிகுமாரின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். வீட்டில் அஜிகுமாரின் தந்தை சசிதரன், தாய் சாந்தம்மா ஆகியோர் இருந்திருக்கிறார்கள். படுக்கையில் கிடந்த சசிகுமாரிடம் பேசிய வங்கி அதிகாரிகள் லோன் செலுத்த தவறியதால் ஜப்தி நோட்டீஸ் ஒட்டுவதாக தெரிவித்தனர். அப்போது மகன் வீட்டில் இல்லை, எனவே இப்போது நோட்டீஸ் ஒட்ட வேண்டாம் என சசிதரன் கூறியுள்ளார். ஆனால் வங்கி அதிகாரிகள் வீட்டின் முன் உள்ள மரத்தில் வீட்டையும், வீடு இருக்கும் நிலத்தையும் ஜப்தி செய்வதாக போர்டு வைத்துள்ளனர்.

அபிராமி வீட்டுமுன் வங்கியால் மாட்டப்பட்ட ஜப்தி போர்டு

மரண வீட்டுக்குச் சென்றுவிட்டு திரும்பியபோது வீட்டின் முன் வைக்கப்பட்ட ஜப்தி நோட்டீஸ் போர்டை கண்ட அபிராமி, 'இது நமக்கு அவமானத்தை ஏற்படுத்தும் அல்லவா' என தந்தையிடம் கேட்டுள்ளார். மேலும் அந்த போர்டை அகற்றவேண்டும், அல்லது ஒரு துணியால் போர்டை மூடும்படியும் அபிராமி கூறியுள்ளார். தந்தை அஜிகுமாரோ, வங்கியில் சென்று பேசி நம் நிலையை புரியவைப்போம். அப்போது அவர்களே போர்டை அகற்றுவார்கள் எனக் கூறியிருக்கிறார்.

தற்கொலை செய்துகொண்ட அபிராமி

பின்னர் அஜிகுமாரும் அவர் மனைவியும் வங்கிக்குச் சென்றுள்ளனர். இதற்கிடையே மனதளவில் பாதிக்கப்பட்டிருந்த மாணவி அபிராமி வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். வங்கிக்குச் சென்று திரும்பிய அஜிகுமார் அறையில் மகள் தற்கொலை செய்துகொண்டதைக் கண்டு கதறி அழுதார். பத்தாம் வகுப்பு தேர்வில் அனைத்து பாடங்களிலும் 'ஏ ப்ளஸ் ' மதிப்பெண் எடுத்த அபிராமி நன்கு படிக்கக்கூடிய மாணவி என்கிறார்கள். வீட்டு முன் ஜப்தி நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் மனமடைந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கேரளாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



from தேசிய செய்திகள் https://ift.tt/zIr4JVh

Post a Comment

0 Comments