மும்பை - சென்னை இடையே மின்மய இரட்டை ரயில் தடம் அமைக்கும் பணி நிறைவு; தமிழர் கோரிக்கை நிறைவேறுமா?

மும்பையிலிருந்து தென்னிந்தியாவிற்குச் செல்லும் ரயில் தடத்தில் எப்போதும் போக்குவரத்து நெருக்கடி இருந்து வந்தது. இதையடுத்து இந்த வழித்தடத்தில் இரண்டாவது தண்டவாளம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. பகுதி வாரியாக இப்பணிகள் முடிக்கப்பட்டு வந்தன.

சென்னை மற்றும் மும்பை இடையே ரயில் தண்டவாளம் அமைக்கப்பட்டு 150 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தற்போது இத்தடம் இரட்டை பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இறுதியாக மத்திய ரயில்வேயில் சோலாப்பூர் மண்டலத்தில் 27 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாசிம்பே - பிக்வான் இடையே இரட்டை தடம் அமைக்கப்பட்டு மின் மயமாக்கும் பணி மட்டும் மீதம் இருந்தது. இத்தடத்தில் சில நாள்கள் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்துவிட்டு மத்திய ரயில்வே அதிகாரிகள் மின் மயமாக்கல் மற்றும் ரயில் தண்டவாள பணிகளை விரைவாக முடித்தனர்.

இரட்டை ரயில் பாதை அமைப்பு

தற்போது மும்பை - சென்னை இடையேயான 1281 கிலோ மீட்டர் தூர ரயில் தடம் இரட்டை தடமாக மாற்றப்பட்டு மின் மயம் ஆக்கப்பட்டுவிட்டது. இதனால் இந்த இரு நகரங்களுக்கு இடையே ரயில்களை விரைவாகவும், கூடுதலாகவும் இயக்க முடியும். தற்போது இந்த ரயில் தடத்தில் ரயில்களை விரைவாக இயக்க தண்டவாளத்தை வலுப்படுத்தும் பணிகள் முழு வேகத்தில் நடந்து வருகின்றன. ஏற்கனவே ரேணுகுண்டா மற்றும் சென்னை இடையே 130 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்களை இயக்கும் அளவுக்கு ரயில் தண்டவாளம் வலுப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய ரயில்வே அதிகாரிகளும் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு வழியாகச் செல்லும் இந்த ரயில் தடத்தில் எதிர்காலத்தில் 130 கிலோமீட்டர் வேகத்தில் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி சிவாஜி சுதிர் கூறுகையில், "ரயில்களின் வேகத்தை அதிகரிக்கவும், ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது இரட்டை தண்டவாளம் அமைக்கப்பட்டு மின் மயமாகப்பட்டு இருப்பதால் மும்பை - சென்னை பயண நேரத்தில் 40 நிமிடத்தைச் சேமிக்க முடியும்" என்று தெரிவித்தார்.

மும்பையிலிருந்து தமிழ்நாட்டிற்கு அதிக ரயில்களை இயக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்து வரும் மும்பை தமிழ் ரயில் பயணிகள் சங்கத்தலைவர் எஸ்.அண்ணாமலையிடம் இது குறித்துக் கேட்டதற்கு, "மும்பை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் 25 லட்சம் தமிழர்கள் வசிக்கின்றனர். திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, தென்காசி, கன்னியாகுமரி, சேலம், கள்ளக்குறிச்சி போன்ற பகுதியைச் சேர்ந்த மக்கள் அதிகமாக வசிக்கின்றனர்.

மும்பை ரயில்நிலையம்

அவர்கள் அடிக்கடி தங்களது சொந்த கிராமத்திற்குச் சென்று வருகின்றனர். மும்பை - நாகர்கோவில் ரயிலைத் தினமும் இயக்கவேண்டும் என்று கடந்த 27 வருடமாகப் போராடி வருகிறோம். தற்போது இரட்டை தண்டவாளமாக்கப்பட்டு இருப்பதால் கூடுதல் ரயில்களை இயக்க முடியும். மும்பை - நாகர்கோவில் ரயிலையும் தினமும் இயக்கவேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.

மத்திய அரசு தற்போதுள்ள தங்க நாற்கர சாலை போன்று மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை நகரங்கள் இடையே 130 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது மும்பையிலிருந்து திருநெல்வேலிக்கு 4 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மும்பை - நாகர்கோவில் ரயில் வாரத்தில் 6 நாள்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கன்னியாகுமரியிலிருந்து மும்பை வரை சென்று வந்த ஜெயந்தி ஜனதா ரயிலை ரத்து செய்துவிட்டு அதனை இப்போது கன்னியாகுமரியிலிருந்து புனே வரை மட்டுமே இயக்குகின்றனர்.



from தேசிய செய்திகள் https://ift.tt/9f6XSek

Post a Comment

0 Comments