மும்பை தாதர் சிவாஜி பார்க்கில் ஒவ்வொரு ஆண்டும் தசராவன்று சிவசேனா பொதுக்கூட்டம் நடத்துவது வழக்கம். இக்கூட்டத்தில் கட்சித் தலைவர் உரையாற்றுவது வழக்கம். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரிய முறைப்படி இந்த பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. சிவசேனா எதிர்க்கட்சியாக இருந்தபோது கூட பொதுக்கூட்டம் நடத்தாமல் இருந்ததில்லை. தற்போது சிவசேனா இரண்டாக உடைந்துவிட்டது. அதிருப்தி கோஷ்டி தலைவர் ஏக்நாத் ஷிண்டே பாஜகவுடன் சேர்ந்து மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்திருக்கிறார். இதனால் உத்தவ் தாக்கரே தரப்பில் முன் கூட்டியே தாதர் சிவாஜி பார்க்கில் அக்டோபர் 5-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்கவேண்டும் என்று கோரி மும்பை மாநகராட்சியில் மனு கொடுக்கப்பட்டது.
இதை தொடர்ந்து அதே இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த ஏக்நாத் ஷிண்டே தரப்பிலும் அனுமதி கேட்டு மனு கொடுக்கப்பட்டது. ஏக்நாத் ஷிண்டே தரப்பில் பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்சில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. ஏக்நாத் ஷிண்டேயிக்கு பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்சில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் தாதர் சிவாஜி பார்க்கில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு கொடுக்கப்பட்ட இரண்டு மனுக்களையும் மாநகராட்சி தள்ளுபடி செய்தது.
எந்த அணிக்கு அனுமதி கொடுத்தாலும், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதனால் தாதர் சிவாஜி பார்க்கில் பொதுக்கூட்டம் நடத்த உத்தரவிடக்கோரி உத்தவ் தாக்கரே தரப்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உத்தவ் தாக்கரேயிக்கு பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கொடுக்க கூடாது என்று ஏக்நாத் ஷிண்டே தரப்பிலும் மும்பை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனுகள் நாளை விசாரணைக்கு வருகிறது.
இந்நிலையில் உத்தவ் தாக்கரே அணி தலைவர்களில் ஒருவரான அஜய் சவுத்ரி இது குறித்து கூறுகையில், ``56 ஆண்டுகளாக பொதுக்கூட்டம் நடத்திக்கொண்டிருக்கிறோம். எனவே என்னவாக இருந்தாலும் திட்டமிட்டபடி பொதுக்கூட்டம் நடத்தப்படும். எங்களை பாதுகாக்க கொரில்லா போர்த்தந்திரத்தை கடைப்பிடிப்போம்” என்று தெரிவித்துள்ளார். சிவசேனாவின் எச்சரிக்கையால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
from தேசிய செய்திகள் https://ift.tt/wVDMY9t
0 Comments