உத்தரப்பிரதேச மாநிலம் ஃபிரோஸாபாத் பகுதியில் உள்ள காவலர் விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாகக் கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கான்ஸ்டபிள் ஒருவர் கதறி அழுத வீடியோ இணையத்தில் வைரலானது. காவலர் மனோஜ் குமார் என்பவர் பொதுமக்கள் முன்னிலையில் , "ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை வாங்குகிறார்கள். ஆனால், வேலை முடிந்த பிறகு இந்த ரொட்டிகளைத்தான் காவலர்கள் சாப்பிட வேண்டும். எங்களால் இந்த உணவை சாப்பிட முடியவில்லை. விலங்குகள்கூட இதை சாப்பிடாது.... என்னை மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக்கூறி, பணியை விட்டு நீக்க மூத்த காவல் அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர்’’ என்றார்.
வீடியோ இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டு பிறகு உணவின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் மனோஜ்குமார் தற்போது பிரோஸாபாத்திலிருந்து 600 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் காஸிபூர் மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது, ``என் குடும்பத்தில் நான் மட்டுமே சம்பாதிக்கும் உறுப்பினர். எனது குடும்பத்தில் இரண்டு இளைய சகோதரர்கள் மற்றும் திருமணமாகாத சகோதரி உட்பட மொத்தம் 6 பேர் உள்ளனர். என்னுடைய வயதான பெற்றோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சுமார் 600 கிலோ மீட்டர் தொலைவில் பணியாற்றிக் கொண்டு அவர்களை பராமரிப்பது மிகவும் கடினமாக இருக்கிறது'' என்றார்.
மேலும் இது தொடர்பாக, காவல்துறையில் பணியாற்றி வரும் மனோஜ்குமாரின் நண்பர் ஒருவர், ``உண்மையான பிரச்னையை பற்றி கேள்வி கேட்டதற்காக அவரைப் போன்ற ஒரு நேர்மையான மனிதர் பாதிக்கப்படுவதைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது. அவர் ஒரு தாழ்மையான பின்னணியில் இருந்து வந்தவர். அவருடைய இரண்டு சகோதரர்கள் இன்னும் தினசரி கூலிகளாக வேலை செய்கிறார்கள். மனோஜ் தனது கல்வியைத் தொடர குழந்தைத் தொழிலாளியாகவும் பணியாற்றினார்'' என்றார் வேதனையுடன்.
from தேசிய செய்திகள் https://ift.tt/ZLhAEXM
0 Comments