இந்தியாவில் மதமாற்றத் தடைச்சட்டம் கொண்டுவருவது பா.ஜ.க-வின் முக்கிய திட்டங்களில் ஒன்று. அதன் அடிப்படையில் பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் கட்டாய மதமாற்றத் தடை சட்டத்தைக் கொண்டு வருகிறார்கள். ஏற்கெனவே எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், உத்தரப்பிரதேச சட்டமன்றத்தில் குரல் வாக்கெடுப்பு மூலம் மதமாற்றத் தடைச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
அதைத் தொடர்ந்து, தற்போது பா.ஜ.க ஆளும் கர்நாடக மாநிலத்திலும், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த சட்டம் கர்நாடக மேலவையில் கொண்டுவரப்பட்டிருக்கிறது. நேற்று முன் தினம் இந்த மசோதா மேலவையில் தாக்கல் செய்யப்பட்டபோது, கர்நாடக எதிர்க்கட்சியான காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது.
அதைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரியங்க் கார்கே, "இந்த பா.ஜ.க அரசு தனிநபரின் அரசியலமைப்பு உரிமைகளைச் சீர்குலைக்கிறது. கட்டாய மதமாற்றங்கள் குறித்த தரவு எதுவும் மாநில அரசிடம் இல்லை. ஆனாலும் இந்த சட்டம் கொண்டுவரப்படுகிறது. இது அரசியலமைப்பின் 25 முதல் 28 வரையிலான விதிகளை மீறுவதாகும்." என்று தெரிவித்திருந்தார்.
இந்த மசோதாவைத் தாக்கல் செய்த கர்நாடக சட்ட அமைச்சர் ஜே.சி. மதுசாமி, "நாங்கள் எங்கள் மதத்தைப் பாதுகாக்கிறோம், கட்டாய மதமாற்றத்தைத் தடுக்க இந்த மசோதாவைக் கொண்டு வந்துள்ளோம். யாருடைய சுதந்திரத்தையும் கட்டுப்படுத்தவில்லை" என்று தெரிவித்திருக்கிறார்.
2021 டிசம்பரில் சட்டப் பேரவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், பா.ஜ.க-வுக்கு மேலவையில் பெரும்பான்மை இல்லாததால் மேல் சபையில் அது தாக்கல் செய்யப்படவில்லை. மே மாதம், ஏழு எம்.எல்.சி.களுக்கான தேர்தல் மூலம், பா.ஜ.க, இப்போது கவுன்சிலில் பெரும்பான்மையாக உள்ளது. அதனால் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை எதிர்த்தாலும், மேல்சபையில் பா.ஜ.க பெரும்பான்மை பலத்துடன் இருப்பதால், இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
from தேசிய செய்திகள் https://ift.tt/aurMO24
0 Comments