மத்திய மும்பையில், மித்தி ஆற்றுக்கும், மும்பை விமான நிலையச் சுற்றுச்சுவருக்கும் இடைப்பட்ட பகுதியான க்ராந்தி நகர் ஒவ்வொரு மழைக் காலத்திலும் வெள்ளத்தில் மூழ்குகிறது.
மும்பையின் மத்தியப் புறநகர்ப் பகுதியான குர்லாவில் பருவகால கன மழை பொழிந்து கொண்டிருக்கிறது. விஷா வா (பெயர் மாற்றம்) இரவு உணவுக்குப் பிறகு குழந்தைகளைப் படுக்க வைக்கிறாள். ஆனால் அவளுக்கு மட்டும் உறக்கம் வரவில்லை. ஆஸ்பெஸ்டாஸ் கூரையில் விழும் பலமான மழைச் சத்தம் அன்றை இரவை நிம்மதியாகக் கழிக்க முடியுமா என்னும் பீதியை அவளுக்குள் ஏற்படுத்துகிறது.
அவளது அச்சம் சில மணி நேரத்தில் நிஜமகிறது. ‘ஆற்றில் வெள்ளம் வந்துவிட்டது. உயிர் பிழைக்க எழுந்து ஓடுங்கள்’ என்னும் கூக்குரலைத் தொடர்ந்து கும்மிருட்டில் தட்டுத் தடுமாறியவாறே தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு மேடான பகுதியை நோக்கி ஓட ஆரம்பிக்கின்றனர். கரையோர மக்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லாமலிருக்கவும், தண்ணீர் ஓடும் குறுகலான சந்துகளிலிருந்து வெளியேறவும், நீண்ட கயிறுகளைப் பிடித்துக் கொண்டு மக்கள் மெதுவாக நடக்கத் தொடங்குகின்றனர். விஷா வா எப்படியோ மழையில் தொப்பலாக நனைந்தவாறே குடும்பத்துடன் மேடான பகுதியை வந்தடைகிறார்.
‘ஆற்று நீர் வடியும் வரை இங்கேதான் இருக்க வேண்டும். ஒரு சில மணி நேரமும் ஆகலாம், ஒரு சில நாள்களும் ஆகலாம்’. ‘உணவு மற்றும் படுக்கை’ என்ற வினாவிற்கு?’ ‘அவை மெதுவாக வரலாம் அல்லது வராமலும் போகலாம். இப்போதைக்கு தங்குவதற்கு மட்டும் இங்கே இடமுண்டு’ என்றார் விஷா வா.
வருடத்துக்கு ஒரு முறைதான் கடுமையான மழையின் போது ஆற்றில் வெள்ளம் வருமா என்றால் இல்லை என்பதே பதில். சில நேரங்களில் வருடத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை கூட மித்தி ஆற்றில் வெள்ளம் வரும். இங்குள்ள 2000 வீடுகளிலும் ஆற்று நீர் கசியும். ஆற்று நீர் மட்டம் அதிகரித்தால், மக்கள் குழந்தைகளுடன் மேடான பகுதிகளைத் தேடி ஓட வேண்டும். இது காலம் காலமாகத் தொடர்ந்து நடைபெறும் நிகழ்வு.
இங்கு வசிக்கும் குடும்பங்களில் குறைந்தபட்சம் 604 குடும்பங்களேனும் புனர்வாழ்வுக்குத் தகுதி படைத்தவை என உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். 2005, மும்பை வெள்ளத்தைத் தொடர்ந்து மித்தி ஆற்றங்கரையோரம் சட்ட விரோதமாகக் குடியேறிய குடிசைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால் இதுவரை 35 குடும்பங்களுக்கு மட்டுமே புனர்வாழ்வு கிடைத்துள்ளது. அண்டைப் பகுதிகளான சந்தேஷ் நகர், ஜரி மரி, பமந்தாயாபாதா ஆகியவையும் வெள்ளத்தால் பாதிக்கப்படுபவை என்றாலும், மித்தி ஆற்றுக்கும், விமான நிலைய சுற்றுச்சுவருக்கும் இடையேயான க்ராந்தி நகர் மக்களுக்கு மட்டும் தப்பிக்க ஒரேயொரு வழிதான் உண்டு.
சட்டமன்ற உறுப்பினர் திலிப் லாண்டே வரும் தசரா பண்டிகையின் போது குறைந்தபட்சம் 200 குடும்பங்களுக்கும், அடுத்த ஆண்டு 1500 குடும்பங்களுக்கும் மறுவாழ்வு அளிக்க உள்ளதாக உறுதி அளித்துள்ளார். ஆனால் இவரது வாக்குறுதி முழுமையாக நிறைவடையும் வரை மித்தி ஆற்று வெள்ளம் எத்தனை உயிர்களை பலி வாங்குமோ என்ற அச்சத்துடன் தூக்கத்தையும் மறந்து மக்கள் வாழ வேண்டும் என்பதே தலைவிதி.
செல்வந்தர்கள் வாழும் ஜுஹூ பகுதி மக்கள் கூட தங்கள் வீடுகளிலிருந்து விமானங்கள் தரை இறங்குவதையும், மேலே எழுவதையும் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் ஏழைகள் வாழும் க்ராந்தி நகர் மக்கள் அன்றாடம் இந்த நிகழ்வைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர். ஆனாலும் இவர்களின் பெரும்பாலோர் விமான நிலைய சுற்றுச்சுவரைத் தாண்டி உள்ளே நுழைந்தது கூட இல்லை என்பதே நிஜம்.
மித்தி ஆற்றில் 3 மீட்டர் அளவைத் தாண்டி தண்ணீர் ஓடினால் அதை ‘அபாய வெள்ள அளவு’ என பிருஹன் மும்பை மாநகராட்சி எச்சரித்துள்ளது. இந்த அளவைத் தாண்டியவுடன் மக்கள் தற்காலிகமாக மேடான இடத்துக்கு அப்புறப்படுத்தப்படுகின்றனர். எதிர்பாரா பெரு மழைக் காலங்களில் தேசிய பேரிடர் மீட்புக் குழு அழைக்கப்பட்டுப் படகுகளில் மக்கள் வெளியேற்றப்படுவர். 2019இல் மித்தி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியபோது கிராந்தி நகரிலிருந்து 400 மக்களும், அந்தேரி கிழக்கு பாமந்தயபாதாவிலிருந்து 900 மக்களும் வெளியேற்றப்பட்டதாக மாநகராட்சி தெரிவித்தது.
246 மீட்டர் உயரத்தில் விஹார் ஏரி முழுவதும் நிரம்பி வழியும் இடத்தில் மித்தி ஆறு தோன்றுகிறது. நிரம்பி வழியும் பொவாய் ஏரி இத்துடன் இணைந்து கொள்கிறது. மொத்த நீர்ப்பிடிப்பு 7295 ஹெக்டேர். நீளம் 17.84 கிமீ. புரிதலுக்காக 1 ஹெக்டேரின் பரப்பளவு 1½ கால்பந்து மைதானத்தின் அளவாகும். பொவாய், மரோல், சாகி நாகா, அந்தேரி, பந்த்ரா-குர்லா வணிக வளாகம் வழியாகவும், பன்னாட்டு விமான ஓடுதளத்தின் கீழேயும் ஓடி நிறைவாக அரபிக் கடலில் கலக்கிறது.
ஆற்றில் வெள்ளம் வருமெனத் தெரிந்தும், பல பத்தாண்டுகளாக அரசியல்வாதிகளின் ஆசியுடன் கரையோரங்களில் குடியேற்றம் நடைபெற்றது. எனவே ஆற்றில் வெள்ளம் வருவது அங்கு வசிப்பவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விஷயமோ, புதிதோ அல்ல. 1984 மற்றும் 1993 வெள்ளங்கள் இன்னும் கிராந்தி நகர மக்களுக்குப் பசுமையான நினைவிருக்கின்றன. ஆனால் அந்தக் காலகட்டத்தில் தனியார் தொலைக்காட்சிகளோ, சமுக ஊடங்களோ இல்லை என்பதால் வெளியே தெரியவில்லை. 2005 வெள்ளம் மட்டுமே பரபரப்பாகப் பேச்சப்பட்டது.
‘பாந்த்ரா-குர்லா வணிக வளாகக் கட்டுமானப் பணிகளுக்காக சுமார் 620 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. மேலும் மித்தி ஆறு நிரோட்டத்தின் கீழ்ப்பகுதியில் அகலப்படுத்தப்படாத மேம்பாலங்களின் சங்கமிப்பால் ஏற்படும் நெரிசல் ஆகியவையே மித்தி ஆற்றில் வெள்ளம் ஏற்படக் காரணங்களாகும். எனவே மேம்பாலங்களை அகலப்படுத்த வேண்டியது முக்கியம் மற்றும் அவசரமான பணி’ என உச்சநீதி மன்றம் நியமித்த குழு 2017இல் ஆய்வறிக்கை சமர்ப்பித்தது.
‘ஆற்றில் அகலம் 50% குறைந்ததாலும், சட்டத்துக்குப் புறம்பாக ஆக்கிரமிப்புகளும், கட்டுமானப் பணிகளும் ஆற்றங்கரை ஓரம் 29% - 70% வரை 1966 தொடங்கி 2005 வரை நடைபெற்றதாலும், மழைக் காலங்களில் ஆற்றில் வெள்ளம் ஏற்படுகிறது’ என 2006-ல் கல்வியாளர்கள் வெளியிட்ட ஆய்வறிக்கை கூறுகிறது.
மித்தி ஆற்று வெள்ளத்துக்கான ஆதாரம் தெளிவாகத் தெரிந்த போதும், சட்டத்துக்குப் புறம்பான கட்டுமானங்களையோ, ஆக்கிரமிப்புகளையோ அகற்றவோ, மக்களை மீள் குடியமர்த்தவோ, அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஆற்றின் கரையை ஒட்டி 50 மீட்டர் வரை எந்தக் கட்டுமானமும் இருக்கக் கூடாது என்ற உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.
‘அரசியல் காரணிகளுக்காக ஆற்றின் கரையோரம் ஆக்கிரமிப்பு செய்த குடிசைகள் முழுமையாக அகற்றப்படவில்லை. இந்த ஆக்கிரமிப்புகளே ஆற்றின் நீரோட்டத்தை தடுக்கிறது. திடக் கழிவு மற்றும் கழிவு நீர் ஆற்றில் கலந்து சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன. ஆற்றில் வெள்ளம் வந்தால் உயிர்பலிகளும் ஏற்படுகின்றன. எனவே ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுவதுதான் ஒரே வழி’ என 2017இல் உச்சநீதி மன்றம் நியமித்த குழு அறிக்கை சமர்ப்பித்தும் எந்தப் பயனுமில்லை.
மித்தி ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அரசியல் உள்ளது. அங்கே குடியிருக்கும் மக்களின் வாக்குகளை இழக்க அரசியல் கட்சிகள் விரும்புவதில்லை. தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்னும் நோக்கத்துடன், அங்குள்ள மக்களின் உயிர்களோடும், சொத்துக்களோடும் விளையாடுகிறார்கள். மேலும் இங்கு வசிக்கும் மக்களைக் கணக்குக் காட்டித்தான் ஒவ்வொரு வருடமும் ஆற்றைத் தூர்வாரப் பல நூறு கோடிகளை அரசால் ஒதுக்கீடு செய்ய முடியும். மக்களை வேறு இடத்துக்குக் குடியமர்த்தினால் தூர்வாருவதற்காக ஒதுக்கப்படும் பல நூறு கோடிகளை அரசு நிறுத்த வேண்டிவரும். இதில் அரசியல் கட்சிகள் கணிசமாக இலாபம் பார்ப்பதால்தான் இங்குள்ள மக்களை வேறு இடங்களில் குடியமர்த்த யாரும் ஆர்வம் காட்டுவதில்லை.
-ஜனனி ரமேஷ்
from தேசிய செய்திகள் https://ift.tt/GeBIpqu
0 Comments