கேரள மாநிலம் மலப்புறத்தில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக கட்டடங்கள், மரங்கள் அகற்றப்பட்டு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
மலப்புறம் தலப்பாற வி.கே.படி என்ற பகுதியில் ஜே.சி.பி இயந்திரம் மூலம் மரங்கள் சாய்க்கப்பட்டன. ஒரு புளியமரத்தை வேரோடு சாய்த்தபோது அதில் கூடுகட்டி வசித்து வந்த நீர்க்காகம், பலவகை கொக்குகள் உள்ளிட்ட பறவைகளின் குஞ்சுகள் கூட்டில் இருந்து கீழே விழுந்து இறந்தன.
நூற்றுக்கும் மேற்பட்ட குஞ்சுகள் கீழே விழுந்ததில் இறந்தன. அதுபோல நீர்க்காகங்கள் அடைகாத்த முட்டைகளும் கீழே விழுந்து நொறுங்கின. உடைந்த சில முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளியே விழுந்து இறந்தன. இதைச் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர். மரம் முறித்தவரிடம் அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மரங்களை வெட்டும்போது அதில் பறவைக் குஞ்சுகளோ, முட்டைகளோ இருந்தால் அவை பெரிதாகி பறக்கும் வரை மரத்தை வெட்டக் கூடாது என விதி உள்ளது. ஆனால், பறவைகளின் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் மரத்தை வேரோடு சாய்த்து அப்புறப்படுத்தியதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதுபற்றி வனத்துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். எந்த விதிமுறைகளையும் கடைப்பிடிக்காமல் பறவைகளைக் கொன்ற ஒப்பந்ததாரர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து ஒப்பந்ததாரர், மரத்தை முறித்தவர்கள் என மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வனத்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், ``நீர்க்காகம் வனத்துறையின் ஷெட்யூல் 4-ல் இடம்பெற்றுள்ளது. ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை நீர்க்காகம் இனப்பெருக்கம் செய்யும். இதைக் கணக்கில் எடுக்காமல் ஒப்பந்ததாரர் மரத்தை முறித்துள்ளார்.
நீர்க்காகம், பலவித கொக்குகள், இறந்த சம்பவத்தில் வன உயிர்கள் பாதுகாப்புச் சட்டத்தின்படி ஒப்பந்ததாரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலம்பூர் நார்த் டிவிஷனல் வனத்துறை அலுவலர் உத்தரவின்பேரில் மரத்தை வேரோடு சாய்த்த ஜே.சி.பி டிரைவர், மரத்தை வெட்டி அப்புறப்படுத்த சென்ற தொழிலாளி மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்றார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/KpfDL5G
0 Comments