புகழ்பெற்ற குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலில் மேல்சாந்தியாக, இளம் வயது மருத்துவரும் யூடியூப் பிரபலமுமான கிரண் ஆனந்த் நியமிக்கப்பட்டுளளார்.
கேரளா மாநிலத்தில் உள்ள குருவாயூரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் உள்ளது. இங்கு மேல்சாந்தியாக 34 வயதே நிரம்பிய கிரண் ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். அக்டோபர் 1-ம் தேதி முதல், அடுத்த 6 மாதங்களுக்கு இவர் குருவாயூர் கோயில் மேல்சாந்தியாக இருப்பார்.
ஆயுர்வேத மருத்துவரான இவர், தன் மனைவி மானசியுடன் ஒரு யூடியூப் சேனலையும் நிர்வகித்து வருகிறார். மாஸ்கோவில் வசித்து வந்த இவர், அங்கு கடந்த ஆறு ஆண்டுகளாக ஆயுர்வேத மருத்துவராக இருந்து வந்தார்.
முன்னதாக, கிரண் ஆனந்தின் தந்தை, கோயிலின் பூஜை, சடங்கு சம்பிரதாயங்களை மேற்கொண்டு வந்தார். வயோதிகம் தொடர்பான நோய்களால் அவர் கோயில் பணிகளை செய்வதில் சிரமத்தை எதிர்கொண்டபோது, கிரண் இங்கு வந்து அப்பணிகளை செய்து கற்றுக் கொண்டார்.
இது குறித்து கிரண் ஆனந்த கூறுகையில், `` நித்ய பூஜை செய்த அனுபவம் இல்லாவிட்டாலும், நான் கற்றுக்கொண்டதை, வேத நெறிமுறைகளாக எனது வாழ்க்கையில் கடைப்பிடிப்பேன். என் தந்தையுடன் கோயிலின் முக்கிய சடங்குகளில் பங்கேற்பேன்; எனது கடமைகளை மிகுந்த பக்தியுடன் செய்வேன். இந்தப் புதிய பொறுப்பு என்னை கடவுளிடம் ஒரு படி மேலே கொண்டு செல்லும்” என்று தெரிவித்திருக்கிறார்.
அவர் மேலும் கூறுகையில், ’’எங்களது யூடியூப் சேனலில் ஆரோக்கியம், கலை, தொழில்நுட்பம், மற்றும் ரஷ்யா மற்றும் அண்டை நாடுகளில் மேற்கொண்ட பயணங்கள் குறித்த வீடியோக்கள் உள்ளன. என் நண்பருடன் இணைந்து பக்தி இசை ஆல்பம் ஒன்றை வெளியிடத் திட்டமிட்டுள்ளேன். மேல்சாந்தி பதவிக்காலம் முடிந்ததும் குருவாயூரில் ஆயுர்வேத மருத்துவமனையை அமைக்கத் திட்டமிட்டுள்ளேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/LlHA2nR
0 Comments