மனைவிகளிடமிருந்து விவாகரத்து பெற்ற 18 ஆண்கள்; கொண்டாட ஏற்பாடு செய்த NGO! - வைரலான இன்விடேஷன்

இன்றைய காலகட்டத்தில் எல்லா வகையான மக்களையும் ஈர்க்க வேண்டும் என்பதற்காக திருமணங்களுக்கு ஆடம்பர செலவு செய்வது வழக்கமாக இருக்கிறது. இதனால் தங்களுடைய திருமண பத்திரிகைகளை வித்தியாசமான முறையில் அச்சிட்டு வருகின்றனர். ஆனால் சற்று வித்தியாசமாக, தங்கள் மனைவிகளிடமிருந்து விவாகரத்துபெற்ற ஆண்களுக்கு அழைப்பிதழ் அச்சடித்து விவாகரத்தை நிகழ்ச்சியாக கொண்டாட திட்டமிட்டிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

மத்தியப் பிரதேசத்தில் விவாகரத்து கோரும் ஆண்களுக்காக பாய் வெல்ஃபேர் சொசைட்டி (Bhai Welfare Society) என்ற அரசு சாரா தொண்டு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த அரசு சாரா தொண்டு நிறுவனம் (NGO) வரதட்சணை கொடுமை, விவாகரத்து உள்ளிட்ட விவகாரங்களில் பாதிக்கப்படும் ஆண்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறது. மேலும், இலவச சட்ட உதவிகளையும் வழங்கி வருகிறது. இந்த நிலையில், தொண்டு நிறுவனம் கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் நீண்டகால சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு விவாகரத்து பெற்ற 18 ஆண்களை அழைத்து சொகுசு விடுதியில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. இந்த நிறுவனம் கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் 18-ம் தேதி போபால் அருகே உள்ள ஒரு சொகுசு விடுதியில் (resort) இந்த நிகழ்வு நடைபெறும் என தொண்டு நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக அழைப்பிதழ்களும் அச்சடிக்கப்பட்டிருந்தன. இது தொடர்பான அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி, பெரும் விவாதத்தைக் கிளப்பியது.

இது தொடர்பாக தொண்டு நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜாக்கி அகமது செய்தியாளர்களிடம், `` இந்த நிகழ்வு இந்திய கலாசாரத்துக்கு எதிரானது என போன் செய்து தெரிவிக்கின்றனர்.

நாங்கள் விவாகரத்தை ஆதரிக்கவில்லை. ஆனால் மோசமான திருமணம் சில நேரங்களில் தற்கொலைக்கு வழிவகுக்கிறது. இதன் காரணமாகத்தான் நாங்கள் அதை நிறுத்த விரும்புகிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு எங்களால் முடிந்த இலவச சட்ட உதவிகளை வழங்கி வருகிறோம்'' என்றார்.

இந்த நிலையில், சில பெண்கள் அமைப்புகள் இந்தக் கொண்டாட்டத்துக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.



from தேசிய செய்திகள் https://ift.tt/fGrMceK

Post a Comment

0 Comments