Kerala: அறிமுகமாகிறது அரசின் ஆன்லைன் டாக்ஸி சர்வீஸ் - ’கேரளச் சவாரி’ - கட்டணம், சலுகைகள் இவைதான்!

வெளியூர்ப் பயணங்களின்போது ஆட்டோ, டாக்ஸி-யில் நியாயமான வாடகையில், பாதுகாப்பாகப் பயணிப்பது என்பது பெரும் சவாலாகவே உள்ளது. மீட்டருக்கு மேல் கேட்பது, அதிக வாடகைக்கு ஆசைப்பட்டு அருகில் உள்ள இடங்களுக்கே சுற்றிச் செல்வது, பீக் அவர்களில் பயணிகளின் அவசரத்தைப் பயன்படுத்தி அதிக வாடகை கேட்பது எனப் பஞ்சாயத்துகளுக்குப் பஞ்சம் இருக்காது.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனியார் ஹால் டாக்ஸி ஆப் சேவைகள் வந்தாலும் பயணிகளின் பாதுகாப்புக்கு முழு உத்தரவாதம் இல்லை. சில சமயங்களில் டிரைவர்களுக்குமே பாதுகாப்பு இல்லாத நிலைதான் உள்ளது. இந்த நிலையில் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களால் மட்டுமே செயல்படுத்தமுடியும் என நினைத்த ஆன்லைன் டாக்ஸி சர்வீஸை கேரள மாநில அரசு செயல்படுத்த உள்ளது. கேரள மக்களுக்கு ஓணம் பண்டிகைப் பரிசாக ’கேரளச் சவாரி’ என்ற திட்டத்தை அரசு அறிமுகப்படுத்துகிறது. கேரள அரசே நடத்தும் இந்த ஆன்லைன் ஆட்டோ, டாக்ஸி திட்டம் வரும் 17-ம் தேதி தொடங்கிவைக்கப்பட உள்ளது.

கேரளச் சவாரி ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கார்

பாதுகாப்பாகப் பயணிக்கவும், வாடகைக்காகப் பேரம் பேசாமல் பயணிகள் மகிழ்ச்சியாகப் பயணம் செய்யவும் ஏதுவாக கேரளச் சவாரி என்ற திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஆட்டோ, டாக்ஸிகளை ஒன்றிணைத்துத் தொழில்துறையின் சார்பில் மோட்டார் தொழிலாளர் சேமநிதி போர்டு சார்பில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம், ஆட்டோ, டாக்ஸி தொழிலாளிகளுக்கு ஏற்புடைய வருமானத்தை உறுதிசெய்யவும் அரசு திட்டம் வகுத்துள்ளது. தனியார் ஆன்லைன் டாக்ஸி சர்வீஸ்களுக்கான சர்வீஸ் சார்ஜ் 25 சதவிகிதத்துக்கும் அதிகமாக உள்ள நிலையில் 8 சதவிகிதம் சர்வீஸ் சார்ஜுடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி போலீஸ் கிளியரன்ஸ் உள்ள டிரைவர்கள் மட்டுமே இந்தத் திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். டூரிஸ்ட் கைடுகளைப்போன்று செயல்பட டிரைவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும் எனப் பல்வேறு நல்ல அம்சங்கள் இதில் உள்ளன.

இதுபற்றி கேரள மாநிலத் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவன்குட்டி கூறுகையில், "கேரள மாநிலத்தில் சொந்தமாக ஆட்டோ, டாக்ஸி சர்வீஸ் ஆகஸ்ட் 17-ம் தேதி தொடங்கப்பட உள்ளது. நாட்டில் முதன் முறையாக கேரள மாநிலம் ஆன்லைன் ஆட்டோ, டாக்ஸி திட்டத்தைச் செயல்படுத்துகிறது. முதலில் திருவனந்தபுரம் மாநகராட்சி பகுதியில் அறிமுகப்படுத்தப்படும். பின்னர் மற்ற பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படும். சர்வீஸ் சார்ஜாகப் பெறப்படும் எட்டு சதவிகிதம் தொகையை இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தவும், டிரைவர்களுக்கு புரமோஷன், இன்சென்டிவ் உள்ளிட்டவை வழங்கவும் பயன்படுத்தப்படும்.

அமைச்சர் சிவன்குட்டி

நெரிசல் மிகுந்த சமயங்களிலும், பீக் அவரிலும் இரண்டு மடங்குத் தொகை வசூலிக்கப்படுவது வழக்கத்தில் உள்ளது. ஆனால், கேரளச் சவாரித் திட்டத்தில் எப்போதும் ஒரே அளவில் கட்டணம் வசூலிக்கப்படும். டிரைவருக்கோ, பயணிகளுக்கோ எதாவது தடங்கள் ஏற்பட்டால் புக்கிங் கேன்சல் செய்யும் வசதி உண்டு. அதற்காகச் சின்னத் தொகை அபராதமாகக் கொடுக்க வேண்டியது வரும். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் பாதுகாப்பாகப் பயணிக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளோம். எனவே போலீஸ் கிளியரன்ஸ் சான்றிதழ் உள்ள டிரைவர்கள் மட்டுமே இந்தத் திட்டத்தில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள். அவசர உதவிக்காக கேரளச் சவாரி ஆப்பிலேயே எச்சரிக்கை பட்டன் வசதி ஏற்படுத்தப்படும். ஆபத்துக் காலங்களில் அந்த பட்டனை அழுத்தினால் போதும். பயணிகள் மட்டுமல்ல, டிரைவரும் எச்சரிக்கை பட்டனை அழுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எச்சரிக்கை பட்டனை அழுத்தினால் போலீஸ், தீயணைப்புத்துறை, மோட்டர் வாகனத்துறை ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்க ஆப்ஷன் வழங்கப்பட்டிருக்கும். அந்த பட்டனை அழுத்தினால் சம்பந்தப்பட்ட துறையினருக்கு எச்சரிக்கை செல்லும். எந்த ஆப்ஷனும் தேர்ந்தெடுக்காமல் இருந்தால் போலீஸ் கட்டுப்பட்டு அறைக்கு எச்சரிக்கைத் தகவல் செல்லும். பாதுகாப்புக்காக வாகனங்களில் ஜி.பி.எஸ் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் இணையும் வாகன ஓட்டிகளுக்கு ஆயில், வாகன இன்ஷூரன்ஸ், டயர், பேட்டரி போன்றவற்றுக்கு சம்பந்தப்பட்ட ஏஜெண்ட்கள் மூலம் டிஸ்கவுன்ட் வழங்கப்படும். பயணிகளுக்கும் ஓட்டுநருக்கும் விபத்து இன்ஷூரன்ஸ் கவர் செய்யப்படும்.

ஆட்டோ, டாக்ஸி டிரைவர்களுக்கான பயிற்சி

’கேரளச் சவாரி’ வாகனங்களில் விளம்பரம் செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இதில் கிடைக்கும் 60 சதவிகிதம் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும். மீதமுள்ள தொகை பயணிகளுக்கு புரமோஷன் ஆஃபர்கள் வழங்கப் பயன்படுத்தப்படும். கேரளச் சவாரி ஆட்டோக்களை அடையாளம் காணும் விதமாக ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும். திருவனந்தபுரத்தில் மட்டும் பெண் ஓட்டுநர்கள் உட்பட 500 ஓட்டுநர்கள் ஆட்டோ - டாக்ஸி திட்டத்தில் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்குத் தேவையான துறை சார்ந்த பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன" என்றார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/f4TMtjK

Post a Comment

0 Comments