HIV: ``உடலுறவு கொண்டதில்லை; ரத்தம்கூட ஏற்றியதில்லை!" - வருந்திய இளைஞர்... மருத்துவர்கள் சொன்னதென்ன?

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி பாரகான் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்குத் தொடர் காய்ச்சல், இருமல் இருந்ததால், மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் சிலர் மாத்திரை, மருந்துகளை எழுதிக் கொடுத்திருக்கின்றனர். ஆனால், எதுவும் பயனளிக்காததால் வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு ஏறி இறங்கியிருக்கிறார்.

அப்போது மருத்துவர்கள் சிலர், எந்த சிகிச்சையும் பயனளிக்காததால் ஹெச்.ஐ.வி பரிசோதனை செய்யுமாறு அறிவுறுத்தியிருக்கின்றனர். அதற்கு ஆரம்பத்தில் மறுப்பு தெரிவித்த அந்த இளைஞர், காய்ச்சல்... இருமல்... சளி தொடர்ந்ததால், ஹெச்.ஐ.வி பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு ஹெச்.ஐ.வி இருப்பது உறுதியானது. அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர், ``எனக்கு 20 வயது தான் ஆகிறது. நான் யாருடனும் உடலுறவில் இருந்ததில்லை. எனக்கு இதுவரை வேறு ரத்தமும் ஏற்றப்படவில்லை. அப்படி இருக்கும்போது எப்படி எனக்கு இந்த நோய் ஏற்பட்டிருக்க முடியும்?" என உடைந்து புலம்பியுள்ளார். அதன் பின்பே மருத்துவர்கள் அவருடைய உடலில் பச்சைக் குத்தியிருந்தது குறித்து விசாரித்துள்ளனர்.

HIV

அதற்கு அந்த இளைஞர், தன் கிராமத்தில் நடைபெற்ற கண்காட்சியில் கையில் பச்சை குத்திக் கொண்டது தொடர்பாகவும், அதைத் தொடர்ந்து சில மாதங்களில் அவர் உடல்நிலை மோசமடையத் தொடங்கியது குறித்தும் விளக்கமளித்திருக்கிறார். அதே போன்ற சம்பவம் நாக்வான் பகுதியைச் சேர்ந்த ஷெஃபாலி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளம்பெண்ணுக்கும் நடந்துள்ளது. அவர் சாலையில் வியாபாரி மூலம் பச்சை குத்திக்கொண்டதால் ஹெச்.ஐ.வி தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

பச்சைக் குத்துதல்

இந்தச் சம்பவங்கள் தொடர்பாக, தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனையின், ஆன்டிரெட்ரோவைரல் சிகிச்சை (ART) மையத்தின் மூத்த மருத்துவர் ப்ரீத்தி அகர்வால், ``ஹெச்.ஐ.வி தொற்றுக்கான முக்கியக் காரணம் குறித்துப் பாதிக்கப்பட்ட இருவருக்கும் தெரியாது. பொதுவாகவே பச்சை குத்த பயன்படுத்தப்படும் ஊசி மிகவும் விலை உயர்ந்தது. அதனால், அதிக வருமானம் ஈட்டுவதற்காக, பச்சை குத்துபவர்கள் ஒரே ஊசியைப் பல நபர்களுக்குப் பயன்படுத்துகின்றனர். பச்சை குத்திக் கொள்பவருக்கு இந்த ஆபத்து தெரியாது. பச்சை குத்துபவர் புதிய ஊசியைப் போட்டாரா என்றுகூட பலர் பார்ப்பதில்லை.

மருத்துவம்

அத்தகைய சூழ்நிலையில், ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவருக்குப் பயன்படுத்திய அதே ஊசியை மற்றவர்களுக்குப் பயன்படுத்துவதன் மூலம் ஹெச்.ஐ.வி தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, பச்சை குத்தும் முன்பு தகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். சமீபத்தில் பச்சை குத்திக் கொண்டவர்கள், ஹெச்.ஐ.வி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதனால் ஒருவேளை அவர்கள் ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக சிகிச்சையைத் தொடங்கலாம்" என்று விளக்கமளித்துள்ளார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/Ubt4l9S

Post a Comment

0 Comments