நிர்வாண வீடியோ: ``நிரூபித்தால், நானே தலையைத் துண்டித்துக்கொள்கிறேன்" - ஆந்திரா எம்.பி காட்டம்

ஆந்திரப் பிரதேசத்தின் இந்துப்பூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கோரன்ட்லா மாதவ், ஒரு பெண்ணிடம் நிர்வாணமாக வீடியோ அழைப்பில் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து, பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய எம்.பி. கோரன்ட்லா மாதவ் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவருகின்றனர்.

அதைத் தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்டுள்ள எம்.பி கோரன்ட்லா மாதவ் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "தெலங்கு தேசம் கட்சியின் (டிடிபி) தலைவர்கள் எனது மரியாதையைக் கெடுக்க `மார்ஃபிங்’ செய்யப்பட்ட நிர்வாண வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள்.

எம்.பி கோரன்ட்லா மாதவ்

மேலும், இந்த போலி வீடியோவை, எதிர்க்கட்சிக்கு ஆதரவாகக் கருதப்படும் செய்தி சேனல்தான் முதல் முதலில் வெளியிட்டது. மேலும் இந்த சதியின் பின்னணியில் அந்த சேனல் இருக்கிறது. எனவே, இந்த விவகாரம் தொடர்பாக பிரஸ் கவுன்சில், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தையும் அணுக உள்ளேன். எனது நற்பெயரைக் கெடுக்கவும், என்னைச் சிக்கலில் தள்ளவும் இந்த சதியின் பின்னணியில் தெலுங்கு தேசம் கட்சி உள்ளது. அவர்களுக்குத் தைரியம் இருந்தால், அவர்கள் என்னிடம் நேரடியாக மோத வேண்டும்.

அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். இது தொடர்பாக எஸ்பி, சைபர் கிரைம் காவல்துறையிடமும் ஏற்கனவே புகார் அளித்துள்ளேன். இந்த சதியை காவல்துறை விசாரித்து அதன் பின்னணியில் உள்ளவர்களைத் தண்டிக்க வேண்டும். அந்த வீடியோ உண்மையானது என நிரூபிக்கப்பட்டால், நானே தலையைத் துண்டித்துக்கொள்கிறேன்," என்று சவால் விடுத்துள்ளார்.

எம்.பி கோரன்ட்லா மாதவ்

கோரன்ட்லா மாதாவுக்குப் பதிலளித்த தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் உமாமகேஸ்வர ராவ், "அவர் வெட்கமின்றி பொய் சொல்கிறார். ஏற்கெனவே அவர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன, இது அவரின் தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தனது கட்சியின் எம்.பி-க்கள், அவரின் அமைச்சரவை சகாக்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் பிற ஒய்.எஸ்.ஆர்.சி.பி தலைவர்களின் மோசமான நடத்தைக்கு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிதான் காரணம்.

கடந்த காலத்திலும், அமைச்சர் அம்பதி ராம்பாபு ஒரு பெண்ணுக்கு எதிராக சில ஆட்சேபகரமான கருத்துக்களைத் தெரிவித்த வீடியோவை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம். முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வெட்கமின்றி அவரை தனது அமைச்சரவையில் வைத்திருக்கிறார். ஆந்திரா மாநிலத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை" என்று தெரிவித்துள்ளார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/J5EOxGV

Post a Comment

0 Comments