கேரள மாநில சி.பி.எம் கட்சியின் எம்.எல்.ஏ-வாக இருப்பவர் கே.டி.ஜலீல். இவர் முந்தைய பினராயி விஜயன் அமைச்சரவையில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்தார். கேரள சட்டசபையின் வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை குழுவில் உறுப்பினராக உள்ளார். இந்த கமிட்டியின் கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக நாட்டின் பல்வேறு இடங்களுக்கு சென்றுவரும் கே.டி.ஜலீல் சமீபத்தில் காஷ்மீர் சென்றிருந்தார். காஷ்மீரில் தான் சென்ற இடங்களின் புகைப்படங்களை முகநூலில் வெளியிட்ட கே.டி.ஜலீல் அதில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை ஆசாத் காஷ்மீர் என்றும், ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதிகளை இந்தியா ஆக்கிரமிப்பு காஷ்மீர் எனவும் பதிவிட்டிருந்தார். இதையடுத்து கே.டி.ஜலீலுக்கு கண்டனங்கள் எழுந்தன.
இதுபற்றி காருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ``ஜலீல் கூறியுள்ளது ராஜதுரோக கருத்தாகும். கேரள மாநில அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். கேரள மாநில பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன் கூறுகையில், "கே.டி.ஜலீல் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அவர் ராஜினாமா செய்யமால் இருந்தால், ராஜினாமா செய்யச்சொல்லி சபாநாயகர் அறிவுறுத்த வேண்டும். சுதந்திரத்தின் 75-வது வருட கொண்டாட்டத்தை ஜலீல் சீர்குலைக்க முயல்கிறார். கே.டி.ஜலீலின் பாகிஸ்தான் ஆதரவு செயல்பாடு பற்றி மத்திய உள்துறைக்கு அறிவிப்போம்" என்றார்.
இதுபற்றி காங்கிரஸ் எதிர்கட்சி தலைவர் வி.டி.சதீசன் கூறுகையில், "கே.டி.ஜலீல் ஆட்சேபனைக்குரிய கருத்தை கூறியுள்ளார். பாகிஸ்தான் பயன்படுத்தும் வாசகத்தை ஜலீல் பயன்படுத்தியுள்ளார். முதல்வருக்கு தெரிந்துதான் ஜலீல் இந்த கருத்தை கூறியுள்ளாரா?" என வி.டி.சதீசன் கேள்வி எழுப்பினார். கே.டி.ஜலீலுக்கு ஆதரவாக சி.பி.எம் கட்சி நிர்வாகிகளோ, அமைச்சர்களோ எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அதே சமயம் முகநூலில் பதிவிடும் கருத்து எல்லாம் சி.பி.எம் கட்சியின் கருத்து இல்லை என அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதற்கிடையே தனது கருத்துக்கு முகநூலில் விளக்கம் அளித்துள்ளார் கே.டி.ஜலீல். தேசிய கொடி புகைப்படத்துடன் அவர் அளித்த விளக்கத்தில், ``சட்டபேரவையின் புலம்பெயர்ந்தோர் நலக்குழுவின் உறுப்பினராக காஷ்மீர் சென்றிருந்தபோது நான் எழுதிய பயணக்கட்டுரையில் உள்ள சில கருத்துக்கள் தவறானவை என என் கவனத்துக்கு வந்தது. நான் நினைத்த கருத்து அல்லாமல் தவறாக கருத்து உணரப்பட்டதால், நாட்டின் நன்மைக்காகவும், மக்களின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் ஏற்படாமல் இருக்க அந்த வரிகளை திரும்பப்பெறுகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/PtvgifC
0 Comments