கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் மல்லப்பள்ளி பகுதியைச் சேர்ந்த 95 வயதான மர்யாம்மா கடந்த புதன்கிழமை மரணம் அடைந்தார். அவரது உடல் ஃபிரீஸர் பாக்ஸில் வைக்கப்பட்டிருந்தது. மர்யாம்மாவின் உடலை நடுவில் வைத்து அவரின் குடும்பத்தினர் அனைவரும் சுற்றி நின்று புன்னகையுடன் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர். அந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலானதுடன், எதிர்மறையான கருத்துகள் அதிக அளவில் பகிரப்பட்டன.
'நடுவில் வைத்திருப்பது பிறந்தநாள் கேக் இல்லை என யாராவது சொல்லிப் புரியவையுங்கள்' என்றும், 'இதென்ன காமெடி ஷோ-வா' எனவும், ’மரண வீட்டில் இருப்பவர்களின் முகங்களில் சந்தோஷத்தை பார்த்தீர்களா' என்பது போலவும் கமென்ட்கள் குவிந்தன. அதே சமயம் இந்த போட்டோவை கேரள கல்வித்துறை அமைச்சர் வி.சிவன்குட்டியும் ஷேர் செய்திருந்தார்.
அமைச்சர் சிவன்குட்டி தனது முகநூல் பதிவில், "வாழ்வின் இறுதியான உண்மை மரணம் மட்டுமே. இறந்தவர்களை அழுது கொண்டே வழியனுப்பி வைப்பதைதான் சாதாரணமாக நாம் பார்க்கிறோம். மரணம் ஒரு பிரிவும், சங்கடகரமானதும் ஆகும். ஆனலும், அது ஒரு விடைபெறுவதும், வழியனுப்புவதும் ஆகும். மகிழ்ச்சியோடு வாழ்ந்தவர்களுக்கு, புன்சிரிப்போடு ஒரு வழியனுப்புதல் செய்வதைவிட சந்தோஷம் வேறு எதாவது உண்டா? இந்த போட்டோவுக்கு நெகட்டிவ் கமென்ட்கள் வேண்டாம்" என குறிப்பிட்டிருந்தார்.
சம்பந்தப்பட்ட போட்டோ விவாதத்தை ஏற்படுத்தியதை தொடர்ந்து மர்யாம்மாவின் உறவினர்கள் விளக்கம் தெரிவித்துள்ளனர். மர்யாம்மாவின் உறவினரான பாபு உம்மன் கூறுகையில், "அம்மச்சி 95 வயது வரை மகன்களோடும், மக்களோடும், மருமக்களோடும், பேரக் குழந்தைகளோடும் மிகவும் நேசத்தோடு இருந்தார். அனைவரும் அவருடைய அன்பை அனுபவித்தோம். கடந்த ஒரு வருடமாக படுத்த படுக்கையாகி விட்டார். கடந்த புதன்கிழமை மரணம் அடைந்துவிட்டார். அம்மச்சியின் நல்ல நினைவுகள் மட்டுமே எங்களுக்கு இருந்தன. அந்த மகிழ்ச்சியை நினைத்துப் பார்த்தோம். அந்த சந்தோஷத்தை நினைவாக வைத்துக் கொள்ளவே குழுவாக புகைப்படம் எடுத்துக்கொண்டோம். வைரலாவதற்காக அந்த போட்டோவை நாங்கள் எடுக்கவில்லை.
மர்யாம்மாவுக்கு ஒன்பது பிள்ளைகள். அதில் ஒருவர் இறந்துவிட்டார். மற்ற பிள்ளைகளும், மருமக்களும், பேரக்குழந்தைகளும் ஒன்றாக கிறிஸ்தவ நம்பிக்கைபடி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தோம். பிரார்த்தனைக்குப் பிறகு, அடக்கம் செய்வதற்கு முன்பு கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 2.15 மணிக்கு எடுத்த புகைப்படம்தான் அது. அதுவும் குடும்ப உறுப்பினர்கள், 'நமக்கு ஒரு போட்டோ எடுத்து வைக்கலாம்' என விரும்பியதால்தான் அந்த புகைப்படம் எடுக்கப்பட்டது. மற்றபடி எதிர்பாராத நேரத்தில் எடுக்கப்பட்ட போட்டோ அல்ல" என்றார்.
மேலும் மர்யாம்மாவின் குடும்ப உறுப்பினர்கள் கூறும்போது, "மரண வீட்டில் அழுகையை மட்டும் பார்த்தவர்களுக்கு இந்த போட்டோவை ஏற்றுக்கொள்ள முடியாது. அழுது எந்த பயனும் இல்லை. மீண்டும் பார்க்கலாம் எனக்கூறி வழியனுப்பி வைக்க வேண்டும். அதைத்தான் நாங்கள் செய்தோம். அம்மச்சியின் உடல் அருகே எங்கள் குடும்ப உறுப்பினர்கள் சுமார் 35 பேர் பிரார்த்தனை செய்துகொண்டு இருந்தோம். அப்போது அவரது மகன்தான் போட்டோ எடுக்கச் சொன்னார்.
குடும்ப வாட்ஸ்ஆப் குரூப்பில் ஷேர் செய்த போட்டோ வெளியே பரவியதுடன், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மர்யாம்மாவின் கணவர் சி.எஸ்.ஐ போதகராக இருந்தார். அவரது சகோதரனும் போதகர்தான். ஒரு மகன் பிஷப்பாகவும், மற்றொரு மகன் போதகராகவும் உள்ளனர். அவரின் இரண்டு மருமகன்கள் போதகராகவும், ஒரு மருமகன் பிஷப்பாகவும் உள்ளார். அப்படி போதகர்களுடன் தொடர்பில் உள்ள குடும்பத்தினர் என்பதால் இறுதிவரை பிரார்த்தித்துக்கொண்டிருந்தோம்" என்றார்கள்.
from தேசிய செய்திகள் https://ift.tt/sy7kA3c
0 Comments