குரங்கு அம்மை நோயால் இந்தியாவில் முதல் மரணம்; ஃபுட்பால் விளையாடியவர்கள் தனிமைப்படுத்தல்!

கேரள மாநிலத்தில் கொல்லம், கண்ணூர், மலப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த மூன்று பேருக்கு குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டது. அதில் கொல்லத்தைச் சேர்ந்தவர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிவிட்டார்.

இந்நிலையில், வெளிநாட்டில் குரங்கு அம்மை பாதித்த நிலையில் ஊர் திரும்பிய திருச்சூரை சேர்ந்த இளைஞர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சூர் சாவக்காடு புன்னயூர் பகுதி சேர்ந்த 22 வயது இளைஞர், கடந்த மாதம் 21-ம் தேதி வளைகுடா நாட்டில் இருந்து ஊருக்கு வந்துள்ளார். அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் காய்ச்சல் உள்ளிட்ட அதிகுறிகள் தென்பட்டதால் கடந்த 27-ம் தேதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். கடந்த 30-ம் தேதி மரணமடைந்துள்ளார்.

அமைச்சர் வீணா ஜார்ஜ்

இறந்த இளைஞருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறிகள் இருந்துள்ளன. இதையடுத்து. அவரது உடலில் இருந்து சாம்பிள்கள் சேகரிக்கப்பட்டு ஆலாப்புழாவில் உள்ள வைராலஜி இன்ஸ்டிட்யூட்டில் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் இறந்த இளைஞரின் வீட்டில் விசாரணை நடத்தினர். அந்த இளைஞர், வளைகுடா நாட்டில் இருந்து இந்தியா திரும்பிய நேரத்தில், அங்கு வைத்து பரிசோதனை நடத்தியபோது குரங்கு அம்மை நோய் உள்ளதாக 'பாசிட்டிவ்' ரிப்போர்ட் வந்துள்ளது. அதற்கான சான்றிதழை உறவினர்கள் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

எனவே, இந்தியாவில் குரங்கு அம்மை நோய்க்கு இறந்த முதல் நபர் என அவர் கருதப்பட்டுள்ளார். மேலும், சுகாதாரத்துறை வழிகாட்டி நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு, அந்த இளைஞரின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன.

இதுகுறித்து, கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், "சாதாரண குரங்கு அம்மை நோயால் இறப்பு ஏற்பட வாய்ப்பு மிகக்குறைவு. எனவே, அந்த இளைஞர் மரணமடைய காரணம் என்ன என்பது குறித்து ஆய்வு செய்ய உயர்மட்ட அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இளைஞருக்கு வெளிநாட்டில் நடத்திய குரங்கு அம்மை பரிசோதனை முடிவு பாசிட்டிவ் என ரிசல்ட் வந்தும், ஏன் சரியான முறையில் அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவிக்கவில்லை என்று தெரியவில்லை" என்றார்.

பரிசோதனை

குரங்கு அம்மையால் இளைஞர் இறந்ததை அடுத்து, திருச்சூர் மாவட்டம் புன்னையூர் பஞ்சாயத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.

இறந்த இளைஞர் கடந்த 27-ம் தேதி நண்பர்களுடன் ஃபுட் பால் விளையாடியுள்ளார். பின்னர் வீட்டுக்குச் சென்றவருக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டுள்ளது. இதனால் மயங்கி விழுந்த இளைஞர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். எனவே அந்த இளைஞருடன் ஃபுட்பால் விளையாடியவர்கள், மருத்துவமனைக்கு கொண்டு சென்றவர்கள் உள்ளிட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.



from தேசிய செய்திகள் https://ift.tt/3GilKx2

Post a Comment

0 Comments