நடிகர் சல்மான் கான் தந்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு மும்பை பாந்த்ரா கடற்கரையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது கொலை மிரட்டல் கடிதம் ஒன்று அவர் வழக்கமாக அமரும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் பஞ்சாப் பாடகர் சித்து மூஸ் வாலாவுக்கு ஏற்பட்ட நிலை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்துவந்தனர். விசாரணையில் கொலை மிரட்டல் கடிதத்தை அனுப்பியது பஞ்சாப் பாடகர் சித்து மூஸ் வாலா கொலையில் முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கும் லாரன்ஸ் பிஸ்னோய் கூட்டம் எனத் தெரியவந்தது. ஏற்கெனவே சல்மான் கான் கடந்த 1998-ம் ஆண்டு ராஜஸ்தானில் படப்பிடிப்புக்குச் சென்றபோது அபூர்வ வகை மான்களை வேட்டையாடியது தொடர்பாக அவருக்கு லாரன்ஸ் பிஸ்னோய் கொலை மிரட்டல் விடுத்திருந்தார்.
தற்போது பிஸ்னோய் மீண்டும் மிரட்டல் விடுத்திருப்பதாலும், பஞ்சாப் பாடகரைக் கொலை செய்திருப்பதாலும் கடந்த மாதம் சல்மான் கான் தனது சொந்தப் பாதுகாப்புக்குத் துப்பாக்கி லைசென்ஸ் வழங் கவேண்டும் என்று மும்பை போலீஸில் விண்ணப்பித்திருந்தார். இதற்காக, கடந்த மாதம் சல்மான் மும்பை போலீஸ் கமிஷனர் விவேக் பன்சல்கரைச் சந்தித்து தேவையான ஆவணங்களைக் கொடுத்தார். அவை சல்மான் கான் வசிக்கும் 9-வது மண்டல போலீஸ் டிஜிபி-யின் பரிசீலனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. டிஜிபி துப்பாக்கி லைசென்ஸ் கொடுக்கலாம் என்று அறிக்கை கொடுத்தார். இதையடுத்து மும்பை போலீஸார் சல்மான் கானுக்குத் துப்பாக்கி லைசென்ஸ் கொடுத்துள்ளனர்.
யாருக்கெல்லாம் துப்பாக்கி லைசென்ஸ்?
பாலிவுட்டில் பல நடிகர்கள் தங்களது சுய பாதுகாப்புக்காக துப்பாக்கி லைசென்ஸ் வாங்கி வைத்திருக்கின்றனர். நடிகர் அமிதாப் பச்சன், நடிகர் சஞ்சய் தத், நடிகை பூனம் டில்லன், சன்னி தியோல், சோகா அலி கான் ஆகியோர் துப்பாக்கி லைசென்ஸ் வாங்கி வைத்திருக்கின்றனர். அந்த வரிசையில் தற்போது சல்மான் கானும் இணைந்திருக்கிறார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/Sp82Etf
0 Comments