மும்பை: 7 வயதில் கடத்தப்பட்ட சிறுமி 9 ஆண்டுகளுக்குப்பின் வீட்டுக்கு அருகேயே மீட்பு - என்ன நடந்தது?

மும்பை அந்தேரியை சேர்ந்த பூஜா என்ற சிறுமி கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி 22-ம் தேதி பள்ளிக்கு சென்ற போது காணாமல் போனார். அப்போது அவருக்கு 7 வயது. அவரின் பெற்றோர் இது குறித்து போலீஸாரிடம் புகார் அளித்தனர். போலீஸாரும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். பூஜாவின் பெற்றோர் கடந்த ஆண்டுகளில் அவரை கண்டுபிடிக்க எவ்வளவோ முயற்சிகள் எடுத்துப்பார்த்தும் பலனளிக்கவில்லை. இந்நிலையில் திடீரென பூஜாவின் பெற்றோர் வசித்த வீட்டிற்கு அருகில் வசிக்கும் ரபீக் என்பவருக்கு மர்ம நம்பர் ஒன்றிலிருந்து பெண் ஒருவர் போன் செய்து பூஜா குறித்து பேசினார்.

பூஜாவை காணவில்லை என்று மும்பையில் அனைத்து இடத்திலும் போஸ்டர்கள் ஒட்டி இருந்ததால் அடிக்கடி இது போன்ற போன் அழைப்புகள் வந்து கொண்டிருந்தன. இதனால் அந்த போன் அழைப்பை ரபீக் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதையடுத்து அப்பெண் வீடியோ காலில் பேசினார். அதோடு தனது வீட்டில் வேலை செய்யும் பூஜாவையும் வீடியோ காலில் காண்பித்தார். உடனே அதனை பூஜா என்று அடையாளம் கண்டுகொண்ட ரபீக் இது குறித்து பூஜாவின் தாயார் மற்றும் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார்.

போலீஸார் விரைந்து வந்து அந்தேரி ஜுகுவில் உள்ள வீட்டில் வேலை செய்து வந்த பூஜாவை மீட்டனர். பூஜாவின் தாயாரும் உடனே வரவழைக்கப்பட்டார். போலீஸ் நிலையத்தில் இருவரும் சந்தித்துக்கொண்ட போது உடனே அடையாளம் கண்டுகொண்டு கட்டிப்பிடித்து அழுதனர். இதையடுத்து இருவரையும் சேர்த்து வைத்தனர். உடனே பூஜாவிடம் விசாரித்த போது பல உண்மைகள் தெரிய வந்தது. பூஜா உண்மையில் அவரின் தாயார் வசித்த வீட்டிற்கு சில வீடுகள் தள்ளித்தான் வசித்து வந்துள்ளார்.

பூஜா தனது தாயாருடன்

அதாவது பூஜா 2013-ம் பள்ளிக்கு வெளியில் தனியாக நின்ற போது ஜோசப் டிசோசா என்பவர் கடத்தி சென்றுள்ளார். பூஜாவை மும்பையில் வைத்திருந்தால் சிக்கல் ஏற்படும் என்று கருதி அவரின் பெயரை மாற்றி கர்நாடகா மாநிலத்தில் போர்டிங் பள்ளியில் சேர்த்தார். சில ஆண்டுகள் கழித்து பூஜாவை யாருக்கும் தெரியாது என்று கருதி கர்நாடகாவிலிருந்து மும்பைக்கு அழைத்து வந்தனர். மும்பைக்கு வந்த பிறகு ஜோசப் தனது வீட்டை விலேபார்லேயில் இருந்து அந்தேரி ஹில்பர்ட் ஹில் பகுதிக்கு மாற்றினார். அங்குதான் பூஜாவின் பெற்றோரும் வசித்து வந்தனர். பூஜாவின் பெற்றோர் வசிக்கும் வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் ஜோசப் தங்க ஆரம்பித்தார். இது குறித்து இவ்வழக்கை விசாரிக்கும் போலீஸார் கூறுகையில், ``ஜோசப் மற்றும் சோனி தம்பதிக்கு ஆரம்பத்தில் குழந்தை இல்லாமல் இருந்தது. இதனால் ஜோசப் பள்ளிக்கு வெளியில் நின்ற சிறுமி பூஜா 7 வயதாக இருந்த போது கடத்தி சென்றார். யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக கர்நாடகா மாநிலம் ரெய்ச்சூருக்கு அனுப்பி படிக்க வைத்தார். ஆனால் ஜோசப்பிற்கு 2016ம் ஆண்டு குழந்தை பிறந்தது.

இதனால் கர்நாடகாவில் படித்துக்கொண்டிருந்த பூஜா வளர்ந்துவிட்டதால் யாருக்கும் தெரியாது என்று நினைத்து மும்பைக்கு வரவழைத்தனர். அதோடு இரண்டு குழந்தைகளை ஜோசப் தம்பதியால் சமாளிக்க முடியவில்லை. இதையடுத்து பூஜாவை அந்தேரியில் உள்ள ஒரு வீட்டில் குழந்தையை கவனித்துக்கொள்ள வேலைக்கு அனுப்பி வைத்தனர். சொந்தமாக குழந்தை பிறந்ததால் பூஜாவை சித்ரவதை செய்ய ஆரம்பித்தனர். ஜோசப் மனைவி சோனி அடிக்கடி பூஜாவை அடிக்க ஆரம்பித்தார். அதோடு ஜோசப் குடித்துவிட்டு வந்து உன்னை தெருவில் இருந்து தூக்கி வந்ததாக பூஜாவிடம் தெரிவித்தார். அதன் பிறகுதான் பூஜாவிற்கு ஜோசப் தம்பதி தனது பெற்றோர் இல்லை என்று தெரிய வந்தது.

கடத்தல்

உடனே இங்கிருந்து எப்படி தப்பி செல்வது என்று தெரியாமல் இருந்தார். தான் வேலை செய்த வீட்டில் தன்னை பற்றிய விபரத்தை தெரிவித்தார். உடனே அந்த வீட்டில் இருந்த பெண் பூஜா கொடுத்த தகவலின் அடிப்படையில் காணாமல் போனவர்கள் பட்டியலில் பூஜா என்ற பெயரில் எதாவது புகார் பதிவாகி இருக்கிறதா என்று பார்த்தார். புகார் பதிவாகி இருந்ததோடு, பூஜாவை காணவில்லை என்று பல இடங்களில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்களும் ஆன்லைனில் கிடைத்தது. அதில் இருந்த நான்கு எண்களில் ஒரு எண் மட்டும் செயல்பாட்டில் இருந்தது. அந்த எண் மூலம் தான் ரபீக்கை தொடர்பு கொண்டு அப்பெண் தகவல் கொடுத்தார். ரபீக் தான் எங்களுக்கு தகவல் கொடுத்தார். ஜோசப் கைது செய்யப்பட்டுள்ளார்” என்று தெரிவித்தார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/JicmYnv

Post a Comment

0 Comments