மகாராஷ்டிராவில் 2019-ம் ஆண்டு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் புதிய கூட்டணி அரசு அமைய முக்கிய காரணமாக இருந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருக்கு எதிராக தொடர்ந்து அமலாக்கப் பிரிவு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கெனவே தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அனில் தேஷ்முக், நவாப் மாலிக்கை மத்திய விசாரணை ஏஜென்சிகளான சிபிஐ, அமலாக்கப் பிரிவு கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறது. தற்போது சரத் பவாரின் பேரனும், கர்ஜத் தொகுதி எம்.எல்.ஏ-வுமான ரோஹித் பவாருக்கு எதிராக அமலாக்கப் பிரிவு விசாரணையை தொடங்கியிருக்கிறது. அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ஏற்கெனவே எச்.டி.ஐ.எல் மோசடி தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இம்மோசடி தொடர்பாக அந்நிறுவனத்தின் தலைவர் ராகேஷ் வாத்வான் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
2006-ம் ஆண்டிலிருந்து 2012-ம் ஆண்டு வரை கிரீன் ஏக்கர் ரிசார்ட் அண்ட் ரியல் டச் நிறுவனத்தில் ராகேஷ் வாத்வானும், சரத் பவாரின் பேரன் ரோஹித் பவாரும் இயக்குநர்களாக இருந்துள்ளனர். எனவே எச்.டி.ஐ.எல் மோசடியில் ரோஹித் பவாருக்கு தொடர்பு இருக்குமா என்ற கோணத்திலும், ரோஹித் பவாருக்கும், ராகேஷ் வாத்வானுக்கும் இடையிலான தொழில் தொடர்பு குறித்தும் ஆரம்பக்கட்ட விசாரணையை அமலாக்கப் பிரிவு தொடங்கியிருக்கிறது.
கிரீன் ஏக்கர் ரிசார்ட் அண்ட் ரியல் டச் நிறுவனம் வெளிநாட்டிற்கு பணம் டிரான்ஸ்ஃபர் செய்திருக்கிறது. அது குறித்தும் அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. இது தவிர மும்பையில் நடந்த பத்ரா சால் நில மோசடி வழக்கு, டி.எச்.எஃப்.எல் மோசடி, பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி மோசடிகளில் ரோஹித் பவாருக்கு இருக்கும் தொடர்பு குறித்தும் சிபிஐ, அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தவேண்டும் என்று பா.ஜ.க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து தேசியவாத காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மகேஷ் அளித்த பேட்டியில், ``அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு, ரோஹித் பவாரின் பெயரை இழுக்கின்றனர். அரசியல் எதிரிகளுக்கு எதிராக அமலாக்கப் பிரிவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. கிரீன் ஏக்கர் நிறுவனத்தில் ரோஹித் பவார் இயக்குநராக இல்லை. பண வீக்கம், வேலையில்லா திண்டாட்டம் தொடர்பாக பாஜக-வை குறை கூறிய மகாராஷ்டிரா விகாஷ் அகாடி தலைவர்களுக்கு எதிராக தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.
ரோஹித் பவார் இதற்கு முன்பு மத்திய விசாரணை ஏஜென்சிகளை பாஜக எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டியிருந்தார். ரோஹித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் வளர்ந்து வரும் தலைவர்களில் ஒருவராக இருக்கிறார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவராக இருக்கும் அஜித் பவாருக்கு அடுத்தப்படியாக ரோஹித் பவாருக்கு கட்சித் தலைமை முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. சரத் பவாரின் சகோதரர் அப்பா சாஹேப் மகன் ராஜேந்திர பவாரின் மகன்தான் ரோஹித் பவார். சரத் பவாரின் மற்றொரு சகோதரரான ஆனந்த்ராவ் மகன்தான் அஜித்பவார். சரத் பவாருக்கு மகன் கிடையாது. மகள் சுப்ரியா மட்டுமே இருக்கிறார். எனவே சரத் பவாருக்கு பிறகு தேசியவாத காங்கிரஸ் கட்சியை யார் கைப்பற்றுவது என்பது தொடர்பாக அஜித் பவாருக்கும், ரோஹித் பவாருக்கும் இடையே போட்டி இருந்து வருகிறது. அஜித் பவார் பவார் தன் மகனை அரசியலில் இறக்கி தேர்தலில் போட்டியிட வைத்தார். அவர் மகன் தேர்தலில் தோல்வியடைந்துவிட்டார். ஆனால், ரோஹித் பவார் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/qLIU4Cm
0 Comments