கர்நாடகாவில் கடந்த சில மாதங்களாகவே, கல்வித்துறையில் பல்வேறு பிரச்னைகளும், விமர்சனங்களும் தொடர்ந்து எழுந்தவண்ணமே இருக்கின்றன. ஹிஜாப் விவகாரம், பள்ளி பாடத்திட்டத்தில் ராமாயணம், மகாபாரதம் போன்றவற்றைச் சேர்த்தல், சாவர்க்கர் குறித்த கருத்துகள் போன்ற பிரச்னைகள் அரசு மற்றும் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தற்போது கல்வித்துறையில் லஞ்சம் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்னிலைப்படுத்தி, கர்நாடகாவைச் சார்ந்த 13,000 தனியார்ப் பள்ளிகள் ஒன்றிணைந்து 2 சங்கங்கள் சார்பாக, பிரதமர் மோடிக்கு புகார் கடிதம் அனுப்பியிருக்கின்றன.
அதில், ``கர்நாடகாவிலுள்ள தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதில், முறையான விதிமுறைகள் ஏதும் பின்பற்றப்படுவதில்லை. அதோடு, புதிய கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதில் பெருமளவில் லஞ்சம், ஊழல் நடக்கிறது. இதுதொடர்பாக கல்வியமைச்சர் பி.சி.நாகேஷ் மற்றும் முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் பலமுறை புகாரளித்தும், இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்த செய்திகள், ஊடகங்களில் வெளியான பிறகும் அதே நிலை தான் நீடிக்கிறது.
மேலும், கட்டண விவகாரத்தில் அரசின் புதிய விதிமுறைகள் பெற்றோர்களுக்கு பெரும் சுமையாக மாறியிருக்கின்றன. எனவே இந்த குற்றச்சாட்டுகளைப் பரிசீலனை செய்து, கர்நாடக கல்வி அமைச்சகம் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறப்பட்டிருக்கிறது. பிரதமர் மோடிக்கு நேரடியாக அனுப்பப்பட்டிருக்கும் இந்த புகார் கடிதத்தால், முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் கல்வியமைச்சர் பி.சி.நாகேஷுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.
from தேசிய செய்திகள் https://ift.tt/bmpcYoX
0 Comments