ஆண், பெண் சமத்துவத்தை நிலைநாட்ட பல்வேறு நடவடிக்கைகளை கேரளா எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கேரள பள்ளிகளில் சமத்துவச் சீருடை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன்படி மாணவர்களும், மாணவிகளும் பேன்ட், சட்டை அணிந்து பள்ளிகளுக்குச் சென்றனர். முதலில் 11, 12-ம் வகுப்புகளுக்கு சமத்துவச் சீருடை அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு ஆதரவும் எதிர்ப்பும் என விவாதங்கள் அனல் பறந்தன. இப்போது, ’அடுத்த கல்வி ஆண்டு முதல் அனைத்துப் பள்ளிகளையும் இருபாலர் பள்ளிகளாக மாற்ற வேண்டும்’ என கேரள குழந்தைகள் நல ஆணையம் உத்தரவிட்டுள்ளதும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
கேரள மாநில குழந்தைகள் நல ஆணையத்தில், சமூக சேவகரான டாக்டர் ஐசக் பால் என்பவர், ஒரு பொதுநல மனுவை அளித்திருந்தார். அதில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி பள்ளிகள் இருப்பதால் பாலின சமத்துவம் புறக்கணிக்கப்படுவதாகக் கூறியிருந்தார். அந்த மனுவை விசாரித்த குழந்தைகள் நல ஆணையம், கேரளத்தில் ஆண் பிள்ளைகள், பெண் பிள்ளைகளுக்குத் தனித்தனிப் பள்ளிகள் என இருப்பதை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டு, அடுத்த கல்வி ஆண்டு முதல் இரு பாலரும் இணைந்து படிக்கும் பள்ளிகளை மட்டுமே ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இதற்காக பள்ளிகளில் கழிவறைகள் அமைப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 90 நாள்களில் எழுத்துபூர்வமாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் மாநில கல்வித்துறைக்கு குழந்தைகள் நல ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இருபாலர் பள்ளிகளின் தேவை பற்றி மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் புரிந்துகொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் குழந்தைகள் நல ஆணையம் உத்தரவில் தெரிவித்துள்ளது.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு வந்த பிறகு ஆண், பெண் எனத் தனித்தனியாக செயல்பட்ட பள்ளிகளில் 11 பள்ளிகள், இருபாலரும் படிக்கும் பள்ளிகளாக மாற்றப்பட்டுள்ளன. பெற்றோர், ஆசிரியர் கழகம் முடிவு செய்து அறிவித்தால் அதை இருபாலர் பள்ளியாக மாற்றலாம் என அரசு ஏற்கெனவே கொள்கை முடிவு எடுத்திருந்தது.
கேரளாவில் தற்போது 280 பெண்கள் பள்ளிகளும், 164 ஆண்கள் பள்ளிகளும் என மொத்தம் 444 தனி பாலர் பள்ளிகள் உள்ளன. இவற்றைதான் இரு பாலர் பள்ளிகளாக மாற்ற வேண்டும் என குழந்தைகள் நல ஆணையம் அறிவித்துள்ளது. கல்வி அறிவில் முதலிடம் வகிக்கும் கேரளம் பாலின பாகுபாட்டை முடிவுக்கு கொண்டுவர கோ எஜூகேஷன் உறுதுணையாக அமையும் என்றும், வரதட்சணை கொடுமை, காதலிக்க மறுக்கும் பெண்கள் மீது ஆசிட் ஊற்றும் கொடுமைகளுக்கு இருபாலர் பள்ளிகள் தீர்வை ஏற்படுத்தும் எனவும் சமூக ஆர்வலர்கள் இதனை வரவேற்றுள்ளனர்.
அதே சமயம் கேரள மாநில கல்வி அமைச்சர் வி.சிவன்குட்டி இந்த திட்டத்தை அடுத்த கல்வி ஆண்டில் செயல்படுத்துவது இயலாத காரியம் எனக் கூறியுள்ளார். இதுபற்றி அமைச்சர் வி.சிவன்குட்டி கூறுகையில், "குழந்தைகள் நல ஆணைய உத்தரவை நான் பார்க்கவில்லை. அது ஐகோர்ட்டு உத்தரவு ஒன்றும் இல்லையே. அனைத்து பள்ளிகளையும் இருபாலர் பள்ளிகளாகச் செயல்படுத்துவதில் சமூகத்தில் வேறுபட்ட கருத்துகள் இருக்குமானால் அதையும் கருத்தில் கொண்டே பரிசீலிக்க முடியும்" என்றார். எனினும், இருபாலர் பள்ளிகளை ஏற்படுத்துவதில் குழந்தைகள் நல ஆணையம் உறுதியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
from தேசிய செய்திகள் https://ift.tt/1yFL0pO
0 Comments