மும்பையில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த இரண்டாம் தேதியில் இருந்து மும்பையில் கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவில் பெய்த மழையால் நகரின் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி வாகனப்போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இன்றும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் ரயில் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கி புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது. பாந்த்ரா - சயான் டி சந்திப்பில் தண்ணீர் தேங்கி வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. புறநகர் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 200 மி.மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்துள்ளது. மும்பை மட்டுமல்லாது நவிமும்பை, தானேயிலும் கனமழை பெய்து வருகிறது. கனமழை பெய்து வருவதால் மும்பையில் பேரிடர் மேலாண்மைப்படை வீரர்கள் மீட்புப்பணிகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். ராய்கட், நாக்பூர், மஹாட் போன்ற பகுதியிலும் தேசிய பேரிடர் மேலாண்மை படை வீரர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
மும்பையில் சயான், பாந்த்ரா, கிங்சர்க்கிள், மாட்டுங்கா, குர்லா போன்ற பகுதியில் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பல வழித்தடங்களில் பஸ்கள் வேறு வழியில் திருப்பி விடப்பட்டது. சாலைகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் சென்றது. ரயில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. கடலில் இன்று பிற்பகல் அலைகளின் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. மும்பையில் மீட்புப்பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் உஷார் நிலையில் இருக்கும்படி முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டுள்ளார். மத்திய மகாராஷ்டிரா, கொங்கன் பகுதியில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மைய அதிகாரி ஜெயந்தா சர்கார் தெரிவித்துள்ளார். மும்பை காந்தி மார்க்கெட் பகுதியில் இந்த ஆண்டும் வழக்கம் போல் தண்ணீர் இடுப்பு அளவுக்கு தேங்கியது. மாநகராட்சி ஊழியர்கள் நகர் முழுவதும் நிறுத்தப்பட்டு மோட்டார் மூலம் தண்ணீர் உடனுக்குடன் அகற்றும் பணியும் நடைப்பெற்று வருகிறது.
from தேசிய செய்திகள் https://ift.tt/jyf1VCp
0 Comments