மத்திய பிரதேசத்தில் மருத்துவக் கல்லூரியில் ஒன்றில் சீனியர் மாணவர்கள் சிலர் தங்கள் ஜூனியர்களை ராகிங் செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன. போலீஸார் இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வீடியோவில், அந்த மருத்துவக் கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர்கள் தங்களின் ஜுனியர் மாணவர்களை வரிசையாக நிற்கவைத்து அவர்களின் கன்னங்களில் அறைகின்றனர். மேலும் அவர்கள் ஒவ்வொருவராக அடி வாங்கும் போது அமைதியாக தலையை குனிந்து தரையை வெறித்துப் பார்க்கிறார்கள். கூடி நிற்கும் மாணவர்கள் அதை வேடிக்கை பார்க்கின்றனர். ஏறக்குறைய 3 நிமிட வீடியோவில் இந்தச் சம்பவம் பதிவாகியிருக்கிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, இதில் சம்பந்தப்பட்ட மாணவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
மத்தியப் பிரதேசத்தில் ஒருவார காலத்திற்குள் நடந்த இரண்டாவது ராகிங் சம்பவம் இது எனக் கூறப்படுகிறது.
சமீபத்திய ராகிங் சம்பவங்களைக் கவனத்தில் கொண்டு கல்லூரிக் குழு சம்பந்தப்பட்ட மாணவர்களை இடைநீக்கம் செய்யவும், விடுதியிலிருந்து நிரந்தரமாக வெளியேற்றவும், அவர்கள்மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யவும் பரிந்துரை செய்துள்ளது என கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
from தேசிய செய்திகள் https://ift.tt/He1dgG6
0 Comments